Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஓசூர் புது பஸ்ஸ்டாண்ட் கட்டுமானப்பணி: அரசு செயலர் திடீர் ஆய்வு

Print PDF

தினமலர் 22.06.2010

ஓசூர் புது பஸ்ஸ்டாண்ட் கட்டுமானப்பணி: அரசு செயலர் திடீர் ஆய்வு

ஓசூர்: ஓசூரில், புதுபஸ்ஸ்டாண்ட் கட்டுமான பணியை இன்று(ஜூன் 22) ஆய்வு செய்ய வருவதாக இருந்த தமிழக உள்ளாட்சி துறை செயலர் நிரஞ்சன் மார்ட்டி, யாருக்கும் தெரியாமல் நேற்று இரவோடு இரவாக வந்து ஆய்வு செய்ததால், பரபரப்பு ஏற்பட்டது. தொழில்நகரமான ஓசூரில் பெங்களூரு நான்கு வழிச்சாலையில் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஹைடெக் மாடலில் புதுபஸ்ஸ்டாண்ட் கட்டப்பட்டுள்ளது. கட்டுமான பணி முடிந்த நிலையில் பஸ்ஸ்டாண்ட்டை திறக்க தேதி தருமாறு நகராட்சி நிர்வாகம் தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்பியது. இதையடுத்து, தமிழக உள்ளாட்சி துறை செயலர் நிரஞ்சன் மார்ட்டி இன்று(ஜூன்22ம்தேதி) வந்து பஸ்ஸ்டாண்ட் பணிகளை ஆய்வு செய்து பஸ்ஸ்டாண்ட் திறப்பு விழா குறித்து தேதி அறிவிப்பதாக இருந்தது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் மூலம் அனைத்து கவுன்சிலர்கள், அதிகாரிகள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு நேற்று காலை தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழக உள்ளாட்சி துறை செயலர் நிரஞ்சன் மார்ட்டி, குடிநீர் வடிகால்துறை சேர்மன் ககன்தீப் சிங் பேடி, தமிழக நகராட்சி நிர்வாக இயக்குனர் செந்தில்குமார் மற்றும் உள்ளாட்சி துறை உயர் அதிகாரிகள் அடங்கிய குழுவினர், நேற்று இரவு 9.30 மணிக்கே ஓசூர் வந்தனர். உடனே, அவர்கள் யாருக்கும் தகவல் தெரிவிக்காமல் பஸ்ஸ்டாண்ட் பணிகளை இரவே ஆய்வு செய்ய தனியாக சென்றனர்.

தகவல் அறிந்த நகராட்சி கமிஷனர் பன்னீர் செல்வம், நகராட்சி தலைவர் சத்யா, துணை தலைவர் மாதேஸ்வரன் ஆகியோர் உடனே பஸ்ஸ்டாண்ட் வந்தனர். பஸ்ஸ்டாண்ட்டை முழுவதுமாக சுற்றிபார்த்த நிரஞ்சன்மார்ட்டி, பஸ்ஸ்டாண்ட் குறுகலாக இருப்பதாகவும், எதிர்காலத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் பஸ்ஸ்டாண்ட்டை விரிவுப்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ""பஸ்ஸ்டாண்ட்டின் இறுதிகட்ட வடிவமைப்பு பணிகள் முடிய இன்னும் பத்து நாள் தேவைப்படுகிறது. தற்போது வரை முடிந்த பணிகளை ஆய்வு செய்தில் பணிகள் தரமாகவும், திருப்திகரமாகவும் உள்ளது. பஸ்ஸ்டாண்ட் திறப்பு விழா தேதி குறித்து முதல்வர், துணை முதல்வரிடம் ஆலோசித்து பின் அறிவிக்கப்படும். போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு பஸ்ஸ்டாண்ட் விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும், '' என்றார்.

பஸ்ஸ்டாண்ட் பணியை யாருக்கும் தகவல் தெரிவிக்காமல் இரவோடு இரவாக உள்ளாட்சி துறை செயலர் ஆய்வு செய்தால், நகராட்சி அதிகாரிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.