Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குடிநீர் மேம்பாட்டுத் திட்டப் பணிகள் ஆய்வு

Print PDF

தினமணி 22.06.2010

குடிநீர் மேம்பாட்டுத் திட்டப் பணிகள் ஆய்வு

திருச்சி, ஜூன் 21: திருச்சி மாநகரில் ரூ. 169 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், பிரதான தண்ணீர் சேகரிக்கும் கிணற்றில் பக்கவாட்டு நீர்வரத்துக் குழாய் பதிக்கும் பணியை மாநகராட்சி மேயர், ஆணையர் ஆகியோர் திங்கள்கிழமை ஆய்வு செய்தனர்.

மாநகராட்சிக்கு உள்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் வசிக்கும் மக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்யும் வகையில், தமிழ்நாடு நகர்ப்புற உள் கட்டமைப்பு நிதி சேவை நிறுவனம் மூலம் ஜப்பான் நிதி நிறுவனத்தின் நிதி உதவி, மாநில அரசின் மானியத் தொகை, மாநகராட்சியின் பங்களிப்பு ஆகியவற்றைச் சேர்த்து, ரூ. 169 கோடியில் 8 தொகுப்புகளாகப் பிரித்து குடிநீர் மேம்பாட்டுத் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக ஸ்ரீரங்கம் மேலூர் பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் 3 இடங்களில் பிரதான தண்ணீர் சேகரிக்கும் கிணறு, 2 தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டிகள், 35 இடங்களில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் அமைக்கப்படுகின்றன. மேலும், 88.59 கிலோ மீட்டர் தொலைவுக்கு பிரதான, கிளை குடிநீர் உந்து குழாய், 262.08 கிலோ மீட்டர் தொலைவுக்கு குடிநீர் விநியோகக் குழாய், 446 கிலோ மீட்டர் தொலைவுக்கு ஏற்கெனவே பதிக்கப்பட்டு பழுதடைந்த குடிநீர்க் குழாய்களை மாற்றியமைத்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதில், ஸ்ரீரங்கம் மேலூர் பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் மேற்கொள்ளப்பட்டு வரும் பிரதான தண்ணீர் சேகரிக்கும் மூன்றாவது கிணற்றில் ஓரடி சுற்றளவு கொண்ட பக்கவாட்டு தண்ணீர் வரத்து குழாய்கள் ஒவ்வொன்றும் 120 அடி ஆழத்துக்கு இரு வரிசைகளாக தலா 11 திசைகளில் பதிக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.

இந்தப் பணிகளை மேயர் எஸ். சுஜாதா, ஆணையர் த.தி. பால்சாமி ஆகியோர் திங்கள்கிழமை ஆய்வு செய்தனர். இந்தப் பணிகளின் முன்னேற்றம் குறித்து வாராந்திர அறிக்கை அளிக்குமாறும், நிர்ணயிக்கப்பட்ட காலகட்டத்துக்குள் முடிக்குமாறும் பொறியாளர்கள், ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தினர்.

அப்போது நகரப் பொறியாளர் எஸ். ராஜா முகமது, உதவி நிர்வாகப் பொறியாளர் என். பாலகுருநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.