Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குப்பைகளை பொது இடத்தில் கொட்டினால் நடவடிக்கை: போடி நகராட்சி எச்சரிக்கை

Print PDF

தினமணி 28.06.2010

குப்பைகளை பொது இடத்தில் கொட்டினால் நடவடிக்கை: போடி நகராட்சி எச்சரிக்கை

போடி, ஜூன் 27: குப்பைகளை பொது இடத்தில் கொட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும் என போடி நகராட்சி ஆணையர் க. சரவணக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

போடியை பிளாஸ்டிக் குப்பைகளற்ற நகராக மாற்றுவதற்கு நகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குப்பைகளை பொது இடங்களில் கொட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் கூறியிருப்பதாவது: போடி நகராட்சிக்குள்பட்ட பகுதியில் ஒருமுறை மட்டும் உபயோகிக்கப்படும் பிளாஸ்டிக் பைகள், டம்ளர்கள், தண்ணீர் பாட்டில்கள் ஆகியவற்றினால் உருவாகும் பொது சுகாதாரக் கேட்டினை தவிர்க்கும் பொருட்டு மேற்கண்ட பிளாஸ்டிக் பொருள்களை விற்பனை செய்யவும், பயன்படுத்தவும் தடை விதித்து நகர்மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதன்மூலம், தற்போது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு நகராட்சி பிளாஸ்டிக் இல்லா நகராட்சியாக விளங்கி வருகிறது.

இந்நிலையில், ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகள், டம்ளர்கள் போன்றவற்றை விற்பனை செய்தாலோ அல்லது பயன்படுத்தினாலோ அவை பறிமுதல் செய்யப்படுவதுடன், அதற்கான நிர்வாகச் செலவினை உரிய நபர்களிடம் வசூல் செய்யப்படும். இதன்படி மொத்த விற்பனை செய்பவர்களிடம் ரூ. 500, சில்லரை விற்பனை செய்பவர்களிடம் ரூ. 200, பயன்படுத்துவோரிடம் ரூ.100 நிர்வாகச் செலவினக் கட்டணமாக வசூல் செய்வதுடன் அந்த பொருள்களும் பறிமுதல் செய்யப்படும்.

இதேபோல, நகராட்சிப் பகுதியில் பிளாஸ்டிக் குப்பைகள், மக்கும் குப்பைகளைச் சேகரிக்க குப்பை சேகரிப்பு வாகனங்கள் வாங்கப்பட்டு குப்பைகள் தனித்தனியே சேகரிக்கப்படுகின்றன.

பொதுமக்கள், வணிக நிறுவனங்கள் குப்பைகளை பொது இடங்களில் கொட்டக்கூடாது. மீறி குப்பைகளைக் கொட்டினால் குடியிருப்பு வீடுகளுக்கு ஒவ்வொரு முறையும் ரூ.100-ம், அலுவலகங்கள், வியாபார நிறுவனங்களுக்கு ரூ.200-ம், சிறிய உணவு விடுதிகள் மற்றும் திருமண மண்டபங்களுக்கு ரூ.500-ம் பெரியவற்றிற்கு ரூ.1000-ம் நிர்வாக செலவினக் கட்டணமாக வசூல் செய்யப்படும். நகரின் பொது சுகாதாரத்தை பேணிப் பாதுகாக்க பொதுமக்கள், வியாபாரிகள், அலுவலர்கள் ஓத்துழைப்பு தர வேண்டும். மேலும் இதுகுறித்து ஆலோசனைகளை 30 தினங்களுக்குள் நகராட்சி அலுவலகத்தில் தெரிவிக்கலாம் என அவர் கூறியுள்ளார்.