Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நீல்மெட்டல் பனால்காவிடம் இருந்து மேலும் 4 வார்டு பணிகள் பறிப்பு

Print PDF

தினமலர் 29.06.2010

நீல்மெட்டல் பனால்காவிடம் இருந்து மேலும் 4 வார்டு பணிகள் பறிப்பு

சென்னை நகரில் துப்புரவு பணி செய்யும், நீல் மெட்டல் பனால்கா நிறுவனத்திடம் இருந்து மேலும் நான்கு வார்டு பணிகளை திரும்பப் பெற மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் புளியந்தோப்பு, திருவல்லிக்கேணி, கோடம்பாக்கம் மற்றும் அடையாறு ஆகிய நான்கு மண்டலங்களில் நீல் மெட்டல் பனால்கா நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணி செய்கிறது. இந்த நிறுவனம் துப்புரவுப் பணியை சரிவர செய்யவில்லை என புகார்கள் எழுந்தன.மாநகராட்சி நிர்வாகம் மண்டல அளவில் எச்சரிக்கை நோட்டீஸ் கொடுத்தும் நீல் மெட்டல் பனால்கா நிறுவனம் சரிவர துப்புரவுப் பணி செய்யவில்லை.அதன் அடிப்படையில் கடந்த மே மாதம் நடந்த மன்றக் கூட்டத்தில் நீல் மெட்டல் பனால்கா நிறுவனம் துப்புரவு பணி செய்யும் கோடம்பாக்கம் மண்டலத்தில் 128 மற்றும் 129 ஆகிய இரண்டு வார்டுகளில் துப்புரவு பணியையும், மற்ற மண்டலங்களில் முக்கிய சாலைகளின் துப்புரவு பணியையும் மாநகராட்சி ஏற்றுக் கொள்வது என்று தீர்மானிக்கப்பட்டது.அதன்படி முதல்கட்டமாக இருவாரங்களுக்கு முன் 128வது வார்டில் துப்புரவுப் பணியை மேயர் சுப்ரமணியன் முன்னிலையில் மாநகராட்சி ஊழியர்கள் தொடங்கினர். அடுத்த வாரம் 129 வார்டின் துப்புரவுப் பணியை மாநகராட்சி ஏற்க உள்ளது. பல வகைகளில் எச்சரிக்கை விடுத்தும் நீல் மெட்டல் பனால்கா நிறுவனம் துப்புரவுப் பணியை மேம்படுத்தாததால் கோடம்பாக்கம் மண்டலத்தில் 117, 118, 120 மற்றும் 121 ஆகிய நான்கு வார்டுகளின் துப்புரவுப் பணியை விரைவில் மாநகராட்சி ஏற்க உள்ளது. இந்த ஆண்டின் இறுதிக்குள் நான்கு மண்டலங்களின் துப்புரவுப் பணியை ஏற்றுக் கொள்ள மாநகராட்சி திட்டமிட்டிருப்பதாக அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. நீல் மெட்டல் பனால்கா நிறுவனத்திடம் இருந்து திரும்பப் பெறும் மண்டலங்களில், மாநகராட்சி துப்புரவு பணி செய்ய வசதியாக தேவைப்படும் துப்புரவு பணியாளர்களை நியமிக்கும் பணியை மாநகராட்சி தொடங்கி உள்ளது.ஏற்கனவே 800 துப்புரவு தொழிலாளர்களை தேர்வு செய்ய கடந்த 10 நாட்களுக்கு முன் நேர்முகத் தேர்வு நடத்தியது. அது போல் மேலும் 800 தொழிலாளர்களை நியமிக்க அடுத்த வாரம் நேர்முகத் தேர்வுக்கு அழைத்துள்ளதாக அதிகாரிகள் கூறினர்.