Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மேயர் நடராஜ் தகவல் விளம்பர பலகைகளை முறைப்படுத்த சட்டம்

Print PDF

தினகரன் 30.06.2010

மேயர் நடராஜ் தகவல் விளம்பர பலகைகளை முறைப்படுத்த சட்டம்

பெங்களூர், ஜூன் 30:மாநகரில் அனுமதி பெறாமல் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகள் அகற்றுவதுடன், விளம்பர பலகை வைப்பது குறித்து புதிய சட்டம் கொண்டுவர விரைவில் அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம் நடத்தப்படும் என்று மேயர் எஸ்.கே.நடராஜ் தெரிவித்தார்.

பெருநகர் மாநகராட்சி மன்ற கூட்டம் மேயர் தலைமையில் நேற்று நடந்தது. இதில் மாநகரில் ஆங்காங்கே வைத்துள்ள விளம்பரம் பலகை குறித்து எதிர்க்கட்சி தலைவர் எம்.நாகராஜ் பேசும் போது,

மாநகரில் உள்ள 8 மண்டலங்களிலும் விளம்பர பலகைகள் நிறைந்துள்ளது. இதில் அனுமதி பெற்றது எவ்வளவு, அனுமதி பெறாமல் உள்ளது எவ்வளவு என்பதை தெளிவுப்படுத்த வேண்டும் என்றார். அவருக்கு கட்சி பேதம் மறந்து எல்லா உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்தனர்.

இதற்கு பதிலளித்து மேயர் நடராஜ் பேசியதாவது:

மாநகரில் ஆயிரத்து 667 விளம்பர பலகைகள் வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் 685 விளம்பரங்கள் தொடர்பான பணம் மாநகராட்சிக்கு வரவில்லை. சில அதிகாரிகள் விளம்பர நிறுவனங்களுடன் கை கோர்த்து மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு செய்துள்ளனர்.

மாநகரில் அனுமதி பெறாமல் வைத்துள்ள விளம்பர பலகைகளை உடனடியாக அகற்ற தீவிர நடவடிக்கை மேற்கொள்ப்படும்.

மாநகரில் வைக்கப்படும் விளம்பர பலகைகள் மூலம் மாநகராட்சிக்கு ரூ.18 கோடி வருவாய் கிடைக்கிறது. ஆனால் விளம்பர ஏஜெண்சிகளுக்கு ரூ.100 கோடி வரை வருவாய் கிடைக்கிறது.

மாநகராட்சிக்கு வரும் வருவாய் கை நழுவி போவதை தடுக்க போதுமான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சில இடங்களில் அரசியலில் பலம் படைத்த சிலர் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகளை எடுக்க விடாமல் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

எவ்வளவு பலம் படைத்த அரசியல்வாதிகள் குறுக்கிட்டாலும், விளம்பர பலகை அகற்றும் பணி தொடர வேண்டும் என்று உத்தரவிட்டுள் ளேன்.

மாநகராட்சிக்கு விளம்பரம் மூலம் வருவாய் ஈட்டுவது அவசியமாகும். இதற்கான அனுமதி கொடுப்பதில் சில நிபந்தனைகள் விதிக்க வேண்டும்.

அதற்காக சட்டத்திருத்தம் கொண்டுவர வேண்டியது அவசியமாகும். இதை கருத்தில் கொண்டு புதிய சட்டம் மற்றும் கொள்கை வகுப்பது தொடர்பாக ஆலோசிக்க விரைவில் அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம் நடத்த முடிவு செய்துள்ளேன். இவ்வாறு எஸ்.கே.நடராஜ் தெரிவித்தார்.