Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை

Print PDF

தினமணி 20.07.2010

கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை

தூத்துக்குடி, ஜூலை 19: தூத்துக்குடியில் பாதாளச் சாக்கடை திட்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்றும் பேச்சுக்கே இடமில்லை என்று மாவட்ட ஆட்சியர் கோ. பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

மேலும், அரசு பணியைத் தடுத்தால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது: தூத்துக்குடி புல்தோட்டம் பகுதியில் அமைக்கப்படும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தால் பொதுமக்களுக்கோ, சுற்றுச்சூழலுக்கோ எந்தவித பாதிப்பும் ஏற்படாது. இது தொடர்பாக அப்பகுதி மக்களை நேரில் சந்தித்து விளக்கம் அளித்துள்ளேன்.

தமிழக அரசின் உயர்நிலை அதிகாரிகள் குழு ஆய்வு நடத்தி தான் இந்த திட்டத்திற்கு ஒப்புதல் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு நிபுணர்கள் ஆய்வு செய்து சுற்றுச்சூழலுக்கோ, நிலத்தடி நீருக்கோ எந்தவித பாதிப்பும் வராது என தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த திட்டம் உலகவங்கி நிதியுதவியுடன் நடைபெறுவதால், உலகவங்கி அதிகாரிகளும் ஆய்வு செய்த பின்னரே திட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த திட்டத்தால் பொதுமக்களுக்கு எந்த வகையிலும் பாதிப்பு வராது என்பதை 100 சதவிகிதம் உறுதியாக கூறமுடியும். நன்கு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் தான் கடலில் விடப்படும். எனவே, கடலில் எந்த பாதிப்பும் ஏற்படாது. எனவே, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்றும் பேச்சுக்கே இடமில்லை.

அரசுப் பணியை நடைபெறவிடாமல் தடுத்தாலோ, அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்தாலோ அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ஆட்சியர்.