Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கோவை நகரின் வளர்ச்சிக்கு குழி பறிக்கும் கும்பல்: புது ரோட்டுக்கும் வேட்டு

Print PDF

தினமலர் 23.07.2010

கோவை நகரின் வளர்ச்சிக்கு குழி பறிக்கும் கும்பல்: புது ரோட்டுக்கும் வேட்டு

செம்மொழி மாநாட் டுக்காக புதுப்பிக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலையை தனிநபரின் சுய நலத்துக்காகத் தோண்ட வைத்துள்ளார் கவுன்சிலர்; அதற்காக கமிஷனர் பெயரையும் முறைகேடாக பயன்படுத்தியுள்ளார். கோவையில் நடந்த செம்மொழி மாநாட்டையொட்டி திருச்சி ரோட்டில், பங்குச்சந்தையிலிருந்து சிந்தாமணிப்புதூர் வரையிலான ரோடு, 16 கோடி ரூபாய் மதிப்பில் அகலப்படுத்தப்பட்டது. மேம்பாலத்திலிருந்து கிழக்கு பகுதியான ராதாராணி திரையரங்கு வரை ரோட்டின் இரு பகுதியிலும் இருந்த ஆக்கிரமிப்புகளும் இதற்காக அகற்றப்பட்டு, ரோடு விரிவுபடுத்தப்பட்டது. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வசமுள்ள இந்த சாலையைப் புதுப்பிக்க, மத்திய அரசை தமிழக அரசு தனிப்பட்ட முறையில் வலியுறுத்தி சிறப்பு நிதியைப்பெற்றது. பணியையும் தேசிய நெடுஞ்சாலைத்துறை சிறப்பாக செய்து முடித்தது. புதிதாக ரோடு போடப்பட்டிருப்பதால், ஓராண்டுக்கு எக்காரணத்துக்காகவும் ரோட்டில் குழி தோண்டக்கூடாது என்று மற்ற துறைகளுக்கு தேசிய நெடுஞ்சாலைத்துறை அறிவுறுத்தியிருந்தது.

பி.எஸ்.என்.எல்., குடிநீர் வடிகால் வாரியம், மின் வாரியம் உள்ளிட்ட எல்லாத்துறையினரும் இதை கடைபிடிக்குமாறு, மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகமும் சுற்றறிக்கை அனுப்பியிருந்தன. இதற்கு முன்பாகவே, ஒண்டிப்புதூர் மேம்பாலத்திலிருந்து ராதாராணி தியேட்டர் பகுதி வரை உள்ள குடிநீர் இணைப்புகள் அனைத்தும் ரோடு விஸ்தரிப்புப் பணிக்காக தற்காலிகமாக துண்டிக்கப்பட்டிருந்தன. செம்மொழி மாநாட்டுக்குப் பின், ரோட்டுக்கு தெற்கு மற்றும் வடக்கு பகுதியில் தலா ஒரு குடிநீர் குழாய் பதித்து குடியிருப்புகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு தேவையான குடிநீர் இணைப்பை வழங்கவும், அதுவரை ஒரு நாள் விட்டு ஒரு நாள் லாரியில் குடிநீர் வினியோகம் செய்வதாகவும் மாநகராட்சி நிர்வாகம் அறிவித்திருந்தது. அதேபோல, இரு நாட்களுக்கு ஒரு முறை லாரியிலும் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.இதனால், பொதுமக்களும் எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல் இருந்தனர். இதே பகுதியில், சி.ஆர். ஆர்.,மெட்ரிக் பள்ளி ரோட் டில் குடியிருக்கும் 11 வது வார்டு கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி மட்டும், தனது வீட்டுக்கு குடிநீர் இணைப்பை ஏற்படுத்துவதற்காக, நேற்று முன் தினம் இரவில் ஆட்களை அழைத்து வந்து, புதிதாக போடப்பட்ட தேசிய நெடுஞ்சாலையைத் தோண் டியுள்ளார்.இதற்காக, அவர் எந்தத் துறையிடமும் முறைப்படி அனுமதி பெறவில்லை. மாநகராட்சி கவுன்சிலர் என்பதால், மாநகராட்சியே தனக்குச் சொந்தம் என்கிற மனப்போக்கில், ஆட்களை அழைத்து வந்து, குழி தோண்டி, குடிநீர் குழாய் இணைப்பை தன்னுடைய குடியிருப்புப் பகுதிக்கு கொண்டு சென்றுள்ளார். அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததையும் மீறி, சிறிது நேரத்தில் இந்த வேலையைச் செய்து முடித் துள்ளார்.

ரோட்டில் குழி தோண்டும் போது, அங்கு "குடிநீர் குழாயை சரி செய்யும் பணி நடக்கிறது, ஆணையாளர்' என்று மாநகராட்சியின் பலகையையும் வைத்து, பிறரது அதிகாரத்தையும் துஷ்பிரயோகம் செய்துள்ளார். இதனால், அங்குள்ள மக்கள் கொந்தளித்து, "விதிமுறைகளுக்கு புறம்பாக குழி தோண்டிய கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தியை தண்டிக்க வேண்டும்; இல்லாவிட்டால் நாங்கள் போராட்டத்தில் ஈடுபடுவோம்' என்று கூறினர்.தங்களுக்கும் அதே போல குழாய் அமைத்துத்தர வேண்டுமென்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்த விஷயத்தில், மாநகராட்சி நிர்வாகத்தின் நடவடிக்கையை பொது மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். எனவே, ஆளுங்கட்சி கவுன்சிலர் என்பதற்காக எவ்வித பாரபட்சமும் இன்றி கவுன்சிலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது, மாநகராட்சி நிர்வாகத்தின் கடமை. அரசுத் துறைகளுக்கே தடை விதித்திருக்கும் போது, ஆளுங்கட்சி கவுன் சிலர் என்பதற்காக இவர் மீது நடவடிக்கை எடுக்காமலிருந்தால், இதுவே தவறான முன்னுதாரணமாகி விடும்.

"பொறுக்க முடியாது' : 11வது வார்டு கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தியிடம் கேட்டபோது,""மாநகராட்சி நிர்வாகம் புதிய குடிநீர் குழாயை எப்போது போடுவது, நாங்கள் எப்போது குடிநீர் பிடித்து குடிப்பது? அதுவரை நாங்கள் பொறுக்கமுடியாது. அதனால், நாங்கள் பழைய குடிநீர் குழாயிலேயே, இணைப்பை ஏற்படுத்தியுள்ளோம்,'' என்று மிகவும் "பொறுப்போடு' பதிலளித்தார். குழி தோண்டப்பட்ட பகுதி, மாநகராட்சி 6வது வார்டுக்குட்பட்டது. இந்த வார்டு கவுன்சிலர்தான், கிழக்கு மண்டலத் தலைவர் சாமி. அவரிடம் இதுபற்றி கேட்டபோது, ""என்னிடமோ, கிழக்கு மண்டல அலுவலக பொறியாளரிடமோ குடிநீர் இணைப்பு செய்வது குறித்து கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி எந்த அனுமதியும் பெறவில்லை. மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் விதிமுறைகளை கவுன்சிலர்கள் முதலில் பின்பற்ற வேண்டும். அதன் பின் பொதுமக்களை பின்பற்ற வலியுறுத்த வேண்டும்,'' என்றார்.
-நமது நிருபர்-