Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நெல்லை மாநகராட்சியில் குடிநீர் கட்டண உயர்வு தற்காலிக நிறுத்தி வைப்பு துணை முதல்வரை சந்திக்க கவுன்சிலர்கள் முடிவு

Print PDF

தினகரன் 23.07.2010

நெல்லை மாநகராட்சியில் குடிநீர் கட்டண உயர்வு தற்காலிக நிறுத்தி வைப்பு துணை முதல்வரை சந்திக்க கவுன்சிலர்கள் முடிவு

நெல்லை, ஜூலை 23: நெல்லை மாநகராட்சி கூட்டத்தில் குடிநீர் கட்டண உயர்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதுதொடர்பாக துணை முதல்வரை சந்தித்து முறையிட கவுன்சிலர்கள் முடிவெடுத்துள்ளனர்.

நெல்லை மாநகராட்சியின் அவசர கூட்டம் மேயர் சுப்பிரமணியன் தலைமையில் நேற்று நடந்தது. துணை மேயர் முத்துராமலிங்கம், கமிஷனர் சுப்பையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மண்டல தலைவர்கள் சீதாராமன், மைதீன் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:

சுதாபரமசிவன்: குடிநீர் கட்டணத்தை நெல்லை மாநகராட்சி ரகசியமாக ரூ.100 ஆக உயர்த்தியுள்ளது. இதுகுறித்து கவுன்சிலர்களின் கருத்துகளை கேட்டிருக்க வேண்டும்.

துரை: ஜனவரி மாதம் நடந்த கூட்டத்தில் 6 மாதம் கழித்து குடிநீர் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்தோம். இப்போது கட்டண உயர்வு கெஜட்டில் வெளியிடப்பட்டுள்ளது. இனிமேல் தனியாக சிறப்பு தீர்மானம் நிறைவேற்றினால் தான் அதனை மாற்ற முடியும். புதிய குடிநீர் திட்டங்கள் செயல்பாட்டுக்கு வரும் வரை இந்த கட்டண உயர்வை நிறுத்தி வைக்கலாம்.

உமாபதி சிவன்: .பி.யில் மாயாவதி அரசு தண்ணீர் வரியை ரத்து செய்துள்ளது. நெல்லை மாநகராட்சியிலும் அதுபோல் செயல்படுத்த மேயர் முன் வரவேண்டும்.

மேயர்: குடிநீர் கட்டண உயர்வுக்கான தீர்மானம் நெல்லை மாநகராட்சியில் மூன்று முறை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது கெஜட்டில் வெளியிடப்பட்டுள்ளதால் இனி நிறுத்தி வைக்க அதிகாரம் இல்லை. அடுத்த மாதம் நெல்லைக்கு வரும் துணை முதல்வரை சந்தித்து நாம் அனைவரும் முறையிடுவோம். சட்டப்படி என்ன செய்யலாம் என அவரிடமே ஆலோசனை கேட்போம்.

சைபுன்னிஸா: கெஜட்டில் அறிவிக்கும் முன் கவுன்சிலர்களை ஏன் நீங்கள் கலந்து ஆலோசிக்கவில்லை. நாங்கள் முன்பே இத்தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தோம். (தொடர்ந்து பல கவுன்சிலர்களின் எதிர்ப்பு காரணமாக குடிநீர் கட்டண உயர்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது).

முருகன்: மாநகராட்சி பகுதிகளில் கொசுதொல்லை அதிகரித்துள்ளது. சான்றிதழ்களில் பெயர் மாற்றத்திற்கு விண்ணப்பித்தால் 10 மாத காலத்திற்கு இழுத்தடிக்கின்றனர். இவ்வாறு விவாதம் நடந்தது.

சாகும்வரை உண்ணாவிரதம் அதிமுக கவுன்சிலர் முடிவு

மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர் பொன்.தங்கராஜ் பேசுகையில், "வீடில்லாதவர்களுக்கு இரவு நேரத்தில் இலவச தங்குமிடங்கள் செய்து கொடுக்க மாநகராட்சி ஏற்பாடு செய்து வருகிறது. இதற்காக சிந்துபூந்துறை பள்ளியை மாநகராட்சி தேர்வு செய்துள்ளது. வார்டுக்கு சம்பந்தமே இல்லாத புதிய நபர்கள் அங்கு வந்து தங்கினால் வீண் பிரச்னைகள் ஏற்படும். மறு இடம் தேர்வு செய்யாவிட்டால் நான் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன்" என்றார். இதுகுறித்து பின்னர் பேசி முடிவெடுக்கப்படும் என மேயர் தெரிவித்தார்.