Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

"சூளேஸ்வரன்பட்டி குடிநீர் பிரச்னைக்கு குடிநீர் வடிகால் வாரியம் பொறுப்பேற்க முடியாது'

Print PDF

தினமலர் 27.07.2010

"சூளேஸ்வரன்பட்டி குடிநீர் பிரச்னைக்கு குடிநீர் வடிகால் வாரியம் பொறுப்பேற்க முடியாது'

பொள்ளாச்சி:"சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சியில் நிலவும் குடிநீர் பிரச்னைக்கு, குடிநீர் வடிகால் வாரியம் எந்த விதத்திலும் பொறுப்பேற்க முடியாது' என, அதன் அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.

பொள்ளாச்சி நகரை ஒட்டியுள்ள சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சியில்வாரத்தில் இரண்டு நாட்கள் வினியோகம் செய்யப்பட்ட குடிநீர், தற்போது மாதத்திற்கு மூன்று நாட்கள் மட்டுமே வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்து, மக்களும், மக்கள் பிரதிநிதிகளும் பல்வேறு போராட்டத்தில் குதித்துள்ளனர்.பேரூராட்சிக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு குடிநீர் வழங்குவதில்லை என்று பேரூராட்சி நிர்வாகம் அறிவித்து, கலெக்டருக்கு மனுஅனுப்பியது. அதன்பின், சூளேஸ்வரன்பட்டிக்கு தனி குடிநீர் திட்டம் கொண்டு வருவதற்கு பேரூராட்சி நிர்வாகம் முடிவு செய்து கலெக்டருக்கு தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி, அரசு அனுமதி பெறப்பட்டுள்ளது.பேரூராட்சியில் நிலவும் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு ஏற்படுத்த கோரி அ.தி.மு.., கவுன்சிலர் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

இந்நிலையில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கை: சூளேஸ்வரன்பட்டி கூட்டு குடிநீர் திட்டம் 1996ம் ஆண்டு பயன்பாட்டுக்கு வந்தது. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் பேரூராட்சிக்கும், சுற்றுப்பகுதி கிராமங்களுக்கும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.இத்திட்டத்தின் கீழ் 2011ம் ஆண்டு, பேரூராட்சியிலுள்ள 19 ஆயிரத்து 957 மக்கள் தொகைக்கேற்ப நாளொன்றுக்கு 13 லட்சத்து 97 ஆயிரம் லிட்டர் குடிநீர் வழங்க வேண்டும் என கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால், தற்போது நாளொன்றுக்கு 16 லட்சத்து 80 ஆயிரம் லிட்டர் தண்ணீர் வழங்கப்படுகிறது.பேரூராட்சிக்கு குடிநீர் வழங்கியதுடன் குடிநீர்வடிகால் வாரியத்தின் பொறுப்பு முடிந்தது. பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு முறையாக வினியோகிக்க வேண்டிய பொறுப்பு பேரூராட்சி நிர்வாகத்தை சார்ந்தது. பேரூராட்சிக்கு குடிநீர் வழங்கியதற்காக, குடிநீர் வடிகால் வாரியத்திற்கு சராசரியாக மாதாந்திர 2.75 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும். அரசு ஆணை படி சலுகை விலையில், ஆயிரம் லிட்டருக்கு 4.50 ரூபாய் என்ற விகிதத்தில் தண்ணீர் வழங்கப்படுகிறது.குடிநீர் வரையறுக்கப்பட்ட அளவை விட மூன்று லட்சம் லிட்டர் அதிகமாக வழங்கியும், பேரூராட்சி நிர்வாகம், 96 லட்சம் ரூபாய் குடிநீர் கட்டணம் செலுத்தாமல் நிலுவை வைத்துள்ளது.

பேரூராட்சிக்கு குடிநீருக்கு தனி திட்டம் நிறைவேறும் வகையில், மேற்கொள்ளப்படும் பணிகளை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்யும் பணி நடக்கிறது. பேரூராட்சி நிர்வாகம் குடிநீர் வடிகால் வாரியத்திற்குசெலுத்த வேண்டிய நிலுவை கட்டணத்தை செலுத்தினால்மட்டுமே புதிய குடிநீர் திட்டம் செயல்பாட்டுக்கு எடுத்து கொள்ள வேண்டும் என்று அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.பேரூராட்சி நிர்வாகத்திற்கு வழங்க வரையறுக்கப்பட்ட குடிநீர் அளவுக்கு அதிகமாக வழங்கப்படுகிறது. இந்நிலையில் குடிநீர் வினியோகத்தை முறைப்படுத்தாததால் ஏற்படும் பிரச்னைக்கு குடிநீர் வடிகால் வாரியம் பொறுப்பேற்கமுடியாது.இவ்வாறு, குடிநீர் வடிகால் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.