Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சுவர் விளம்பரங்கள் எந்த உருவத்தில் வந்தாலும் அகற்றப்படும்

Print PDF

தினமலர் 30.07.2010

சுவர் விளம்பரங்கள் எந்த உருவத்தில் வந்தாலும் அகற்றப்படும்

சென்னை : ""சென்னை மாநகராட்சியின் உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் மாணவர்கள் உபயோகப்படுத்தும் வகையில் நூலகங்கள் அமைக்கப்படும்,'' என, மேயர் சுப்ரமணியன் தெரிவித்தார்.சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டம் மேயர் சுப்ரமணியன் தலைமையில் நடந்தது. கூட்டம் முடிந்த பின், மேயர் நிருபர்களிடம் கூறியதாவது:

மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் 61 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநகராட்சி நலவாழ்வு மையங்களிலுள்ள சிறப்பு வார்டுகளுக்கு அறிவிக்கப்பட்ட கட்டணத்தை ரத்து செய்வது, சைதாப்பேட்டை, ஆலந்தூர் சாலையில் 1 கோடி ரூபாய் செலவில் நவீன குப்பை மாற்று நிலையம் அமைப்பது, நுங்கம்பாக்கம் பள்ளியில் புதிய தொடக்கப் பள்ளி தொடங்குவது போன்ற தீர்மானங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.மாநகராட்சியின் 67 உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் மாணவ, மாணவியர் படித்து பயன்பெறும் நிலையில் 1 கோடி 25 லட்ச ரூபாய் செலவில் நூலகங்கள் அமைக்கப்படவுள்ளது.நூலகங்களுக்கு தேவையான புத்தகங்கள் 6 லட்சம் ரூபாய் செலவில் வாங்கப்படும். ஒவ்வொரு நூலகத் திலும் 200 புத்தகங்கள் வாங்கி வைக்கப்படும்.சொத்து வரி வசூலிப்பை மேம்படுத்த குறிப்பிட்ட அரையாண்டிற்குள் சொத்து வரி செலுத்துபவர்களுக்கு 1 சதவீதம் ஊக்கத் தொகையும், அரையாண்டிற்குள் கட்ட தவறுபவர்களுக்கு அபராதம் விதிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.கவுன்சிலர்களின் வார்டு அலுவலகங்களில் உபயோகப்படுத்த 81 லட்ச ரூபாய் செலவில், பிரிண்டருடன் கூடிய லேப்-டாப் வாங்கி கொடுக்கப்படும்.கவுன்சிலர்கள், அந்த பகுதி பொதுமக்களுக்கு பிறப்பு, இறப்பு சான்றுகளை இலவசமாக எடுத்து கொடுப்பார்கள். மாநகராட்சி மண்டலத்திற்கு ஒன்று வீதம் 10 ஆற்றல் சார் பள்ளிகள் தொடங்கப்படும்.விளம்பரப் பலகைகள் தடை செய்யப்பட்ட நிலையில், தற்போது பெரிய கட்டடங்களின் சுவர்களில் ஒட்டும் வகையில் விளம்பரங்கள் வைக்கப்படுகிறது. விளம்பரங்கள் எந்த உருவத்தில் வந்தாலும் மாநகராட்சி அவைகளை கட்டாயம் அகற்றும்.இவ்வாறு மேயர் கூறினார்.