Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

விளம்பர பேனர்களை அகற்றாவிட்டால் பாரபட்சமில்லாமல் நடவடிக்கை: மேயர் எச்சரிக்கை

Print PDF

தினமணி 30.07.2010

விளம்பர பேனர்களை அகற்றாவிட்டால் பாரபட்சமில்லாமல் நடவடிக்கை: மேயர் எச்சரிக்கை

சென்னை, ஜூலை 29: சுவர்களில் வைத்துள்ள விளம்பர பேனர்களை அகற்றாவிட்டால், பாரபட்சமில்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி மேயர் மா.சுப்பிரமணியன் எச்சரித்தார்.

விளம்பர பலகைகள் மூலம் பொதுமக்களுக்கு இடர்பாடுகள் ஏற்படுவதாகப் புகார்கள் எழுந்தன. அதைத்தொடர்ந்து, விளம்பர பலகைகளை அகற்றும்படி தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவையடுத்து, சென்னையில் உள்ள ஆயிரக்கணக்கான விளம்பரப் பலகைகள் அகற்றப்பட்டன. இருந்தபோதிலும் ஆங்காங்கே முறைகேடாக விளம்பர பலகைகள் வைக்கப்படுவதும், அகற்றப்படுவதும் நடந்து வருகின்றன.

விளம்பர பலகைகள் வைப்பதற்கு தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சில தனியார் நிறுவனங்கள் புதிய யுக்தியாக சுவர்களில் விளம்பர பேனர்கள் வைப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளன.

இந்நிலையில் சுவரில் ஒட்டப்பட்டுள்ள விளம்பர பேனர்களை அகற்றாவிட்டால், பாரபட்சமில்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி மேயர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்திற்குப் பிறகு அவர் நிருபர்களிடம் கூறியது:

சுவர்களில் ஒட்டப்படும் விளம்பர பேனர்களை அகற்ற கால அவகாசம் தரப்படும். அந்த கால அவகாசத்திற்குள் அகற்றவில்லையெனில், மாநகராட்சி அதிகாரிகளே விளம்பர பேனர்களை அகற்றுவர். அதற்கான செலவை, அந்தந்த நிறுவனங்கள் அல்லது உரிமையாளர்களிடம் இருந்து மாநகராட்சி அதிகாரிகள் வசூல் செய்வர். கட்டணம் தரவில்லையெனில் போலீஸில் புகார் செய்து பாரபட்சமின்றி மேல்நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் மேயர் மா.சுப்பிரமணியன்.