Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குளங்கள், கால்வாய்களில் பிளாஸ்டிக் கழிவுகளை வீசினால் கிரிமினல் நடவடிக்கை: ஆட்சியர்

Print PDF

தினமணி 05.08.2010

குளங்கள், கால்வாய்களில் பிளாஸ்டிக் கழிவுகளை வீசினால் கிரிமினல் நடவடிக்கை: ஆட்சியர்

மதுரை, ஆக. 4: குளங்கள், கால்வாய்களில் பிளாஸ்டிக் கழிவுகளை வீசுவோர் மீது, கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று, மாவட்ட ஆட்சியர் சி. காமராஜ் எச்சரித்துள்ளார்.

மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக வளாகத்தில் இரண்டாவது கட்டத் தூய்மைப் பணிகளை, புதன்கிழமை தொடங்கிவைத்து ஆட்சியர் கூறியதாவது:

தூங்கா நகரமான மதுரையில் தூய்மைப் பணிகள் திட்டம் மேற்கொள்ளப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஏற்கெனவே, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம், மேலமடை உள்ளிட்ட பகுதிகளில் தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டன.

ஆட்சியர் அலுவலக வளாகத்தில் புதர்மண்டிக் கிடந்த செடிகள் அகற்றப்பட்டன. அங்கிருந்த கரடு முரடான பாதைகள் சீர் செய்யப்பட்டன. பயன்படாமல் இருந்த கழிவறை பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. அந்த இடத்தில் தற்போது, செம்மண் போட்டு சமப்படுத்தப்பட்டு, புங்கை, வேம்பு உள்ளிட்ட மரங்கள் நடப்பட உள்ளன. மேலும், சமன்செய்யப்பட்ட இடத்தில் வாகனங்கள் நிறுத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

அலுவலக வளாகத்தைத் தூய்மையாக வைத்திருக்குமாறு, ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குப்பைகளை யாரும் ஜன்னல் வழியாக வெளியே தூக்கி எறியக்கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது. அனைத்து அலுவலகங்களிலும் குப்பைகளை போட வசதியாக பிளாஸ்டிக் கூடைகள் வழங்கப்பட உள்ளன.

வருகிற 10-ம் தேதி ஒத்தக்கடைப் பகுதியில் தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதில், கிராமப் பஞ்சாயத்து, நகரப் பஞ்சாயத்து, மாணவர்கள், மகளிர் சுயஉதவிக் குழுவினர் என 1500-க்கும் மேலானவர்கள் இப்பணியில் ஈடுபடுவர். இதேபோல, நாகமலை புதுக்கோட்டை, செக்கானூரணி ஆகிய இடங்களிலும் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட உள்ளது.

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக வளாகத்தில் நடைபெற்ற தூய்மைப் பணியில், மாநகராட்சி துப்புரவு ஊழியர்கள், உத்தங்குடி, ஒத்தக்கடை பஞ்சாயத்து துப்புரவு ஊழியர்கள், செஞ்சிலுவை சங்கத்தினர், மகளிர் சுயஉதவிக் குழுவினர் உள்பட 60 பேர் பங்கேற்றனர். மதுரை மாநகரையும், மாவட்டத்தையும் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டுமெனில், மாவட்ட நிர்வாகத்துடன் சேர்ந்து மக்களும் ஒத்துழைப்பது அவசியமாகும்.

மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி, பேரூராட்சி அலுவலர்கள், மாமன்றத் தலைவர்கள், உறுப்பினர்கள், எக்ஸ்னோரா, தானம் அறக்கட்டளை போன்ற தன்னார்வ தொண்டு நிறுவன உறுப்பினர்கள், மகளிர் சுயஉதவிக் குழுவினர், நண்பர்கள் குழுவினர் ஆகியோர் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்பட உள்ளது. இக்குழு பொதுமக்களிடம் தங்கள் சுற்றுப்பகுதிகளை தூய்மையாக வைத்திருக்க úóவண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி பிரசாரத்தில் ஈடுபடும். குளங்கள், கால்வாய்களில் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகளை சிலர் வீசிவிட்டு செல்வதால், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுவதுடன், கழிவு நீர் வெளியேற முடியாமல் அடைப்பும் ஏற்படுகிறது. எனவே, பிளாஸ்டிக் கழிவுகளை குளங்களில் வீசுவோர் மீது கிரிமினல் வழக்கு போடப்படும் என எச்சரிக்கப்படுகிறது என்றார். இந்நிகழ்ச்சியில், மகளிர் திட்ட அலுவலர் தங்கவேல், உதவி இயக்குநர் (பஞ்சாயத்து) பெருமாள், உள்ளிட்டோர் கலந்துகொண்டர்.