Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஒற்றுமையுடன் செயல்படுங்கள்!

Print PDF

தினமணி 13.08.2010

ஒற்றுமையுடன் செயல்படுங்கள்!

சிதம்பரம், ஆக.12: சிதம்பரம் நகர்மன்ற உறுப்பினர்கள், கருத்து வேறுபாடுகளை மறந்து சுமுகமான முறையில் ஒற்றுமையுடன் இருந்து மக்களுக்கு பணியாற்ற வேண்டும் என நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் பி.வி.தண்டபாணி தெரிவித்தார்.

சிதம்பரம் நகராட்சித் தலைவர் பௌஜியாபேகத்தின் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி) போக்கை கண்டித்து கடந்த 3 கூட்டங்களாக திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ததால் கூட்டம் நடைபெறாமல் ஒத்தி போனது.

கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் ரூ| 7.50 கோடி செலவிலான நகர குடிநீர் விரிவாக்கத் திட்டத்துக்கான தீர்மானம் நிறைவேற்றப்படாமல் போனது.

நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநரை அழைத்து கூட்டத்தை நடத்தி தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என திமுக கூட்டணி உறுப்பினர்கள் வெளிநடப்பு மற்றும் முற்றுகை போராட்டத்தை நடத்தியதால் தீர்மானம் நிறைவேற்ற முடியாமல் போனது.

இந்நிலையில் சிதம்பரம் நகர்மன்றக் கூடத்தில் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் பி.வி.தண்டபாணி தலைமையில் நகர்மன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில், தலைவர் ஹெச்.பௌஜியாபேகம் மற்றும் 28 நகர்மன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். 5 நகர்மன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

கூட்டத்தில் இயக்குநர் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் பேசிய விவரம்:

இயக்குநர்: நகரில் தங்குதடையின்றி வளர்ச்சிப் பெற நகர்மன்றம் சுமுகமாகவும், சிறப்பாகவும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே அரசு மற்றும் மக்களின் எதிர்பார்ப்பாகும்.

தமிழகத்தில் 5 இடங்களில் ரூ| 1170 கோடிக்கு குடிநீர்த் திட்டங்களை அறிவித்துள்ளார் முதல்வர். சிதம்பரத்தில் |ரூ 7.50 கோடி செலவிலான நகர குடிநீர் விரிவாக்கத் திட்டத்துக்கு நகர்மன்றம், தீர்மானம் நிறைவேற்றிருந்தால் முதல்வர் அறிவித்த பட்டியலில் இத்திட்டமும் சேர்ந்திருக்கும்.

சில கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் நகர வளர்ச்சியை பாதிக்கும் வகையில் செயல்பாடு இருக்கக்கூடாது. எனவே கருத்து வேறுபாடுகளை மறந்து உறுப்பினர்கள் சுமுகமான முறையில் ஒற்றுமையுடன் இருந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

மக்கள் நலன் கருதி ஒருமித்த கருத்துடன் குடிநீர்த் திட்டத்தை உறுப்பினர்கள் நிறைவேற்றித் தர வேண்டும்.

.ஜேம்ஸ்விஜயராகவன் (திமுக): அனைத்து நகர்மன்ற உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று தலைவர் நடந்திருந்தால் இப்பிரச்னை ஏற்பட்டிருக்காது. தலைவர், உறுப்பினர்களின் கோரிக்கைகளை கேட்காமல் தனது கட்சியைச் சேர்ந்தவர்களை வைத்து முடிவு எடுப்பதால்தான் இப்பிரச்னை ஏற்பட்டது.

கடந்த 4 ஆண்டுகளாக வருமானத்தை பெருக்க எந்தவித முயற்சியும் தலைவர் மேற்கொள்ளவில்லை. நகராட்சிக்குச் சொந்தமான புல்பண்ணை செயல்பாடின்றி பலகோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

நீதிமன்ற வழக்கினால் வரி வசூல் |ரூ 4.50 கோடி பாக்கி உள்ளது. நிலுவையில் உள்ள வழக்கை முடித்து வரியை வசூலிக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. மேற்கண்டவற்றின் மூலம் வருவாயை பெருக்கியிருந்தால் குடிநீர்த் திட்டத்துக்கான நகராட்சியின் பங்களிப்பு | ரூ1 கோடியை நாமே வழங்கியிருக்கலாம்.

தற்போது அந்த நிதியை குடிநீர் இணைப்புக்கான கூடுதல் டெபாசிட் என்ற பெயரில் மக்கள் மீது சுமை செலுத்தப்பட்டுள்ளது. எனவே மக்களிடமிருந்து பெறாமல் வேறுவழியில் அந்த |ரூ 1 கோடியை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆர்.செந்தில்குமார் (அதிமுக)- சாலைகள் மேம்படுத்தாதற்கு அடிப்படை காரணம் | 44 கோடி செலவில் அரசால் கொண்டு வரப்பட்ட புதிய பாதாள சாக்கடை விரிவாக்கத் திட்டம். இந்த திட்டம் இதுவரை நடைமுறைப்படுத்தவில்லை. குடிநீர் டெபாசிட் தொகை உயர்த்தி வசூலிக்கக் கூடாது. மாற்று நிதி மூலம் இத்திட்டத்துக்கு நிதியை அளிக்க ஆய்வு செய்ய வேண்டும்.

Last Updated on Friday, 13 August 2010 09:22