Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

புறம்போக்கு நிலத்தில் பட்டா தமிழக அரசின் உத்தரவுக்கு ஐகோர்ட் இடைக்கால தடை

Print PDF

தினகரன் 18.08.2010

புறம்போக்கு நிலத்தில் பட்டா தமிழக அரசின் உத்தரவுக்கு ஐகோர்ட் இடைக்கால தடை

சென்னை, ஆக. 18: புறம்போக்கு நிலத்தில் 3 ஆண்டு வசித்தால் பட்டா வழங்கலாம் என்ற அரசு ஆணைக்கு இடைக்காலத் தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிவகாசி மண்டல வரி செலுத்துவோர் சங்க செயலாளர் தேன்ராஜ், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

சிவகாசியில் இரண்டு ஏரிகள் உள்ளன. சிவகாசி மக்கள் தண்ணீருக்கு இந்த ஏரிகளைத்தான் நம்பியுள்ளனர். ஏரியை சுற்றியுள்ள அரசு புறம்போக்கு நிலத்தை 100க்கும் மேற்பட்டோர் ஆக்கிரமித்து வீடு கட்டியுள்ளனர். 10 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்கப்படும் என கடந்த 2006ம் ஆண்டு அரசு அறிவித்தது. இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். எங்களுக்கு எதிராக உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதால், உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்துள்ளோம். அது நிலுவையில் உள்ளது.

இதற்கிடையே, 10 ஆண்டு வரம்பை 5 ஆண்டுகளாக குறைத்து, 2008ம் ஆண்டு புதிய அரசாணையை தமிழக அரசு பிறப்பித்தது. இதை எதிர்த்தும், உயர்நீதிமன்றத்தில் தனியாக வழக்கு தொடர்ந்துள்ளோம். அதுவும் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், 5 ஆண்டு என்பதை 3 ஆண்டாக குறைத்து, கடந்த ஜனவரி மாதம் அரசு உத்தரவிட்டுள்ளது. இது சட்டவிரோதமானது. இதற்கு தடை விதிக்க வேண்டும். இதனால் ஆக்கிரமிப்பாளர்கள் பலன் பெறுவார்கள். ஏரி, குளங்களை ஆக்கிரமித்து வீடு கட்டியிருப்பவர்களுக்கு பட்டா வழங்கினால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இம்மனு, தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் பெஞ்ச் முன்பாக விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பாக மூத்த வக்கீல் என்.ஆர்.சந்திரன், வக்கீல் சகாதேவன் ஆகியோரும், தமிழக அரசு சார்பாக அரசு பிளீடர் ராஜா கலிபுல்லாவும் வாதாடினர். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், ‘புறம்போக்கு நிலங்களில் 3 ஆண்டு குடியிருந்தால் பட்டா வழங்கப்படும் என்ற அரசாணையை இந்த வழக்கு முடியும் வரை அமல்படுத்தக் கூடாதுஎன உத்தரவிட்டனர். வழக்கில் அரசு தரப்பில் 4 வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர்.