Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பொதுமக்களுக்கு இடையூறாக பன்றிகளை வளர்ப்போர் மீது கடும் நடவடிக்கை நகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை

Print PDF

தினகரன் 24.08.2010

பொதுமக்களுக்கு இடையூறாக பன்றிகளை வளர்ப்போர் மீது கடும் நடவடிக்கை நகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை

பொள்ளாச்சி, ஆக. 24: பொள்ளாச்சி நகரில் பொதுமக்களுக்கு இடையூறாகவும், சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் வித்திலும் பொது இடங்களில் பன்றிகள் வளர்ப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பொள்ளாச்சி நகரின் பல இடங்களில் சாக்கடை கால்வாய்களை ஒட்டிய பகுதிகளிலும், குடியிருப்புகள் நிறைந்த பகுதிகளிலும் பன்றிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இவை சில இடங்களில் இரவு நேரங்களில் மட்டுமே வளர்ப்போரால் அடைத்து வைக்கப்படுகின்றன. பெரும்பாலான இடங்களிலும் பன்றிகள் ஆங்காங்கு சுற்றித் திரிந்து சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகின்றன. இதுதொடர்பாக பொதுமக்களிடம் இருந்து அதிகளவில் புகார்கள் வந்தன. இதன் காரணமாக நகராட்சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கையில் இறங்கியது. சுகாதார பிரிவில் உள்ள துப்புரவு பணியாளர்களைக் கொண்டு நகரில் சுற்றித்திரிந்த பன்றிகளை பிடித்து நகருக்கு தொலைவில் கொண்டுபோய் விடப்பட்டது.

இதுதொடர்பாக நகராட்சி நிர்வாகம் ஒரு எச்சரிக்கையையும் விடுத்திருந்தது. அதில் குடியிருப்பு பகுதிகளில் பன்றிகளை வளர்க்கக் கூடாது. அதிலும் பொது இடங்களில் சுற்றித் திரிந்தால் பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்துவதோடு உரிமையாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நடவடிக்கைக்கு பிறகு நகரில் பன்றிகள் வளர்ப்பது சற்றே குறைந்திருந்தது.

ஆனால், தற்போது மீண்டும் நகரின் பல இடங்களில் அதிலும் குடியிருப்பு பகுதிகளில் அதிகளவில் பன்றிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக மரப்பேட்டை பள்ளம், நேரு காலனி, பெரியார் காலனி, கோட்டூர் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் பன்றிகள் வளர்க்கப்படுகின்றன. இவ்வாறு வளர்க்கப்படும் பன்றிகளை அதன் உரிமையாளர்கள் பகல் நேரங்களில் தெருக்களில் சுற்றித் திரிய விட்டுவிடுகின்றனர்.

இவ்வாறு பொது இடங்களில் சுற்றித் திரியும் பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்துவதோடு, பன்றிகளை வளர்ப்போர் மீது நடவடிக்கை எடுக்கவும் நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக நகராட்சி ஆணையாளர் வரதராஜ் கூறியதாவது:

நகரின் பல இடங்களில் பொதுமக்களுக்கு இடையூறாகவும், சுகாதார சீர்கேடு ஏற்படும் விதத்திலும் பன்றிகள் அதிகளவில் வளர்ப்பதாக புகார்கள் வந்துள்ளன. ஆகவே, சுகாதார ஆய்வாளர்களை தீவிரமாக கண்காணிக்கும்படி உத்தரவிடப் பட்டுள்ளது. சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் விதத்தில் பொது இடங்களில் சுற்றித் திரியும் பன்றிகளை சுகாதார பிரிவு பணியாளர்களைக் கொண்டு பிடித்து அப்புறப்படுத்தும் பணி விரைவில் துவங்கும். மேலும் பொது இடங்களில் சுற்றித்திரியும் வகையில் பன்றிகளை வளர்ப்போர் மீது சட்டப்படியான கடும் நடவடிக்கைகளையும் எடுக்க நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இவ்வாறு வரதராஜ் கூறினார்.