Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

புதிய மார்க்கெட்டில் தலை தூக்கும் பிரச்னைகள் நடைபாதை கடை வைத்தால் நடவடிக்கை

Print PDF

தினகரன் 09.09.2010

புதிய மார்க்கெட்டில் தலை தூக்கும் பிரச்னைகள் நடைபாதை கடை வைத்தால் நடவடிக்கை

மதுரை, செப். 9: புதிய சென்ட்ரல் மார்க்கெட் மக்கள் மத்தியிலும் வியாபாரிகளிடமும் நல்ல வர வேற்பை பெற்றுள்ளது. ஆனால் இங்குள்ள சில குறைபாடுகளை களைந்தால் மார்க்கெட் மாற்றம் முழு வெற்றி பெறும்.

மதுரை மீனாட்சி அம் மன் கோயில் அருகில் இருந்த சென்ட்ரல் மார்க் கெட், மாட்டுத் தாவணிக்கு மாற்றம் செய்யப்பட்டு வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. பல்வேறு தடைகள் ஏற்பட்டபோதிலும் மத்திய அமைச்சர் மு..அழகிரி அதிரடி நடவடிக்கையால் இச்சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

இங்கு கட்டப்பட்டுள்ள 524 கட்டிட கடைகளில் பலர் திறக்காமல் உள்ளனர். 1090 தரைக் கடைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் தயாரான கடைகள் மாத வாடகைக்கு ஒதுக்கும் வரை மாநகராட்சி நேரடியாக தின வாடகை வசூலித்து வருகிறது.

இதற்கு போட்டியாக தனி நபர்கள் மார்க்கெட்டின் மத்தியில் நடைபாதைகளை ஆக்கிரமித்து கொள்கின்றனர். அதில் நள்ளிரவு முதல் விடியும் வரை கடை அனுமதித்து ரூ. 50, ரூ. 100 என முறைகேடாக வசூலிக்கின்றனர்.

இன்னொரு கும்பல் நள்ளிரவில் நடைபாதையில் துண்டு போட்டு பணம் தரும் வியாபாரிகளுக்கு இடத்தை கொடுக்கின்றனர். இதனால் உண்மையான கடைக்காரர்களுக்கு வியாபாரம் பாதிக்கிறது.

தக்காளி, சீமைக்காய் வியாபாரிகளுக்கு 131 தரை கடைகளுக்கு இடம் வெட்ட வெளியில் ஒதுக்கப்பட்டுள்ளது. தளமோ, மேற் கூரையோ இல்லை. வெயிலில் தக்காளி வெம்புகிறது.

மழை பெய்தால் சகதியில் நிற்க முடியவில்லை என வியாபாரிகள் கூறினர். இங்கு லாரிகள் வந்து திரும்ப முடியாத அளவுக்கு ஒரு பாதை மட்டும் உள்ளது. முன் பகுதியில் யாரும் நுழைய முடியாதபடி கயிறு கட்டி வளைக்கப்பட்டுள்ளது.

மார்க்கெட்டில் நுழையும் கடைக்காரர்கள் சைக்கிள் உள்ளிட்ட அனைத்து இரு சக்கர வாகனங்களுக்கு கட் டணம் வசூலிக்கப்படுகிறது. சைக்கிளுக்கு கட்டணம் வசூலிப்பதை தவிர்க்கலாம். மார்கெட்டில் பயன்படுத்தப்படும் தராசு எடைக்கற்கள் போலியானவையாக உள்ளன.

இதை மாற்றி எலெக்ட்ரானிக் தராசு பயன்படுத்த கட்டாயப்படுத்தலாம். விலை நிர்ணயம் செய்வதிலும் குளறுபடி உள்ளது. இதை உழவர் சந்தை போல நிர்ணயித்து விற்றால் பொதுமக்கள் பயனடைய முடியும்.

கொடைக்கானல், ஊட்டி, ஓசூர் பகுதிகளில் இருந்து லாரிகளில் வரும் காரட், பீட்ரூட், உருளைகிழங்கு போன்ற காய்கறிகள் மொத்த வியாபாரம் நடக்கும் இடமான பரவையில் இறக்கப்படுகின்றன. இதை மாற்ற வேண்டும். வெங்காய மொத்த மார்க்கெட் கீழ மாரட் வீதியில் உள்ளன. இதுவும் மாட்டுத் தாவணிக்கு வர வேண்டும்.

மார்க்கெட்டுக்கு வெளியூர்களில் இருந்து காய்கறி கொண்டு வரவும், சிறு வியாபாரிகள் வாங்கி செல்லவும் தேவையான பஸ் வசதி இல்லை. மதுரை நகர் முழுவதும் சிறு வியாபாரிகள், கூடைகளில் காய்கறி வாங்கிச் செல்ல நள்ளிரவு முதல் காலை வரை பஸ் வசதி இல்லை.

தலைச் சுமையுடன் செல்ல வேண்டியது இருப்பதால் மார்க்கெட் வாசலுக்கு பஸ் வசதி அவசியமாகிறது.

நள்ளிரவு முதல் விடியும் வரை அதிக வியாபாரம் என்பதால், பாதுகாப்புக்கு புறக் காவல் நிலையம் அமைய வேண்டும். இது போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதின் மூலம் மார்க்கெட் முழு வெற்றிக்கு வழி வகுக்கும்.

மார்க்கெட்டை மாநகராட்சி ஆணையாளர் செபாஸ்டின், துணை ஆணையாளர் தர்ப்பகராஜ், தலைமை பொறியாளர் சக்திவேல் மற்றும் அதிகாரிகள் நேற்று பார்வையிட்டனர். ஆணையாளர் கூறியதாவது:&

மார்க்கெட்டில் மாநகராட்சி அனுமதித்ததை தவிர நடைபாதை கடைகள் அனுமதிக்கப்படமாட்டாது. அனுமதிக்கப்பட்ட கடைகள் முன்பாக விரித்துக் கொள்ளவும் அனுமதி இல்லை. இதன்படி நள்ளிரவு முதல் காலை வரை போலீஸ் பாதுகாப்புடன் மாநகராட்சி குழு கண்காணிக்கும். மீறி நடைபாதையில் கடை வைத்தால் அகற்றப்பட்டு, அந்த நபர் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்கப்படும். என்றார்.