Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மின்மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சினால் குடிநீர் இணைப்பு துண்டிப்பு

Print PDF

தினமணி 15.09.2010

மின்மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சினால் குடிநீர் இணைப்பு துண்டிப்பு

தூத்துக்குடி, செப். 14: தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் மின்மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சினால் குடிநீர் இணைப்பு உடனடியாக துண்டிக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் பெ. குபேந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தூத்துக்குடி மாநகரில் 37,000 குடிநீர் இணைப்புகள் உள்ளன. வல்லநாடு தாமிரபரணி ஆற்றுப்படுகையில் இருந்து பெறப்படும் குடிநீர் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது குடிநீர் விநியோகம் செய்யப்படும் நாள்களின் இடைவெளியைக் குறைப்பதற்கு அலுவலர்கள் மூலம் ஆய்வு செய்யப்பட்டு தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

ஆய்வில் பொதுமக்கள் தேவைக்குப் போக அதிகமான குடிநீரை அடைக்காமல் வடிகால்களில் விடுவதும், கால்நடைகளைக் குளிப்பாட்டுவதும், தோட்டங்களுக்குப் பயன்படுத்துவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, சட்டவிரோதமாக மின்மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சுவதும் கண்டறியப்பட்டது. இதனால், குடிநீர் விநியோகம் செய்யும் நாள்களின் இடைவெளியைக் குறைக்க இயலாத நிலை ஏற்படுகிறது. மேலும், சட்டவிரோதமாக மின்மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சுவது குறித்து மாநகராட்சி அலுவலகத்தில் தகவல் கொடுக்கும்படியும், தகவல் கொடுப்பவர்களின் பெயர்கள் ரகசியமாக வைக்கப்படும் எனவும் அறிவிக்கப்படுகிறது.

மின்மோட்டார் மூலம் தண்ணீர் உறிஞ்சுபவர்கள் தாங்களே முன்வந்து அகற்றிவிட வேண்டும். அதிகாரிகளின் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டால் மின்மோட்டார் பறிமுதல் செய்யப்படுவதுடன், சம்பந்தப்பட்ட குடிநீர் இணைப்பும் துண்டிக்கப்படும். அபராதமாக 15 ஆயிரம் வரை செலுத்த வேண்டும். மேலும், அடுத்து குடிநீர் இணைப்பு குறைந்தது 6 மாதங்களுக்கு வழங்கப்படாது என்றார் ஆணையர்.