Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நடை மேம்பால கட்டுமான பணிக்கு அனுமதி தராத ஆர்.டி.ஓ., அலுவலகம்

Print PDF

தினமலர் 16.09.2010

நடை மேம்பால கட்டுமான பணிக்கு அனுமதி தராத ஆர்.டி.ஓ., அலுவலகம்

சேலம்: சேலத்தில் முக்கிய சந்திப்பு இடங்களில், மக்கள் பயன்பாட்டிற்காக நடை மேம்பாலம் கட்டும் பணிக்கு அனுமதி தராமல் வட்டார போக்குவரத்து அலுவலகம்(ஆர்.டி.ஓ.,) இழுத்தடித்து வருகிறது. சேலம் மாநகரின் நெடுஞ்சாலையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகனங்களின் பெருக்கத்தினால் மக்கள் சாலைகளை கடந்து செல்வது என்பது சிரமமான ஒன்றாக மாறியுள்ளது. சாரதா கல்லூரி சாலை வழியாக அஸ்தம்பட்டி, கோரிமேடு, ஏற்காடு, கன்னங்குறிச்சி, சின்ன திருப்பதி ஆகிய இடங்களுக்கு செல்லும் வாகனங்கள் இந்த சாலையை பயன்படுத்துகின்றன.அரசு, தனியார் கல்லூரிகள், விருந்தினர் மாளிகை, கலெக்டர் மற்றும் போலீஸ்துறையின் உயரதிகாரிகளின் பங்களாக்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் நகரின் முக்கிய பிரமுகர்கள் வீடுகள் உள்ளதால், இந்த ரோட்டில் வாகன போக்குவரத்து அதிகம். மேலும், ஜங்ஷன், ஐந்து ரோடு, டி.வி.எஸ்., சத்திரம், ராமகிருஷ்ணா ரோடு மற்றும் செரி ரோடு, அரசு மருத்துவமனை, கலெக்டர் அலுவலகம், மாநகராட்சி அலுவலகம், பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள், நான்கு ரோடு சிக்னல் மற்றும் புதிய பஸ் ஸ்டாண்ட் வழியாக செல்கின்றன.

இப்பகுதியில் ரோட்டினை கடந்து செல்ல முடியாமல் மக்கள் பெரிதும் சிரமம் அடைகின்றனர்.தமிழகத்தின் பெரு நகரங்களில் முக்கிய போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் மக்கள் சாலையை கடந்து செல்ல நடை பாதை மேம்பாலங்கள், சுரங்க பாதை அமைக்கப்பட்டுள்ளது. சேலத்தில் அதுபோன்ற நடைபாதை மேம்பாலங்கள், ரயில் பாதையை கடக்க சில இடங்களில் மட்டுமே உள்ளது.மக்களுக்கு பயன்படும் வகையில் மாநகரில் உள்ள நெடுஞ்சாலையில், மக்கள் அதிக அளவில் கடக்கும் இடங்களான புதிய பஸ் ஸ்டாண்ட், நான்கு ரோடு மற்றும் சாரதா கல்லூரி முன்புறம் ஆகிய மூன்று இடங்களில் நடைபாதை மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது.

இந்த மேம் பாலங்கள் விளம்பரங்கள் முலம் கட்ட சென்னையை சேர்ந்த விளம்பர கம்பெனியிடம் விடப்பட்டுள்ளது.இதற்காக மாநகராட்சி, நெடுஞ்சாலை துறை, வட்டார போக்குவரத்து துறைகளிடம், தடையில்லா சான்று பெற விண்ணப்பித்தது. நெடுஞ்சாலைத்துறையினர் மூன்று மாதங்களுக்கு முன்பாக, தங்கள் துறையின் மூலம் மாநகராட்சிக்கு தடையில்லா சான்று வழங்கி விட்டது. ஆனால், வட்டார போக்குவரத்து துறை இன்னும் அனுமதி வழங்காததால், பணிகள் துவங்குவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது. இது பற்றி மாநகராட்சி கமிஷனர் பழனிச்சாமி கூறியதாவது:முக்கிய இடங்களில் மக்கள் சாலையை கடந்து செல்ல நடைபாதை மேம் பாலங்கள் கட்ட திட்டமிடப்பட்டது. அதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

நெடுஞ்சாலைத்துறை மற்றும் வட்டார போக்குவரத்து துறையிடம் தடையில்லா சான்று பெற விண்ணப்பித்திருந்தோம். நெடுஞ்சாலைத் துறையிடம் இருந்து தடையில்லா சான்று வந்து விட்டது. வட்டார போக்குவரத்து துறையிடமிருந்து இன்னும் வரவில்லை. இதற்கான ஏற்பாடுகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. விரைவில் அனுமதி கிடைத்து விடும். சென்னையை சேர்ந்த தி இம்பிரஷன் அவுட்டோர் ஏஜன்ஸி எனும் விளம்பர நிறுவனம் மூலம் பணிகள் துவங்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.