Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நாகையில் புதை சாக்கடை திட்டப் பணிகள் ஆய்வு

Print PDF

தினமணி 17.09.2010

நாகையில் புதை சாக்கடை திட்டப் பணிகள் ஆய்வு

நாகப்பட்டினம், செப். 16: நாகை நகராட்சியில் நடைபெற்று வரும் புதை சாக்கடைத் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ச. முனியநாதன் புதன்கிழமை ஆய்வு செய்தார்.

நாகை நகராட்சியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் 49 கோடியே 43 லட்சம் ரூபாயில் செலவில் நகராட்சி பகுதிக்குள்பட்ட வேதநாயகம் தெரு, செட்டித்தெரு, கிடங்கு சாலை, பப்ளிக் ஆபீஸ் சாலை, பெருமாள் தெற்கு வீதி, கடற்கரை சாலை, பாண்டியன் திரையரங்கு சாலை உள்ளிட்ட இடங்களில் புதை சாக்கடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை புதன்கிழமை ஆட்சியர் முனியநாதன் பார்வையிட்டார்.

இதன் பின்னர் ஆட்சியர் கூறியது:

புதை சாக்கடைத் திட்டத்தின்கீழ் மொத்தம் 3,418 ஆள் நுழைவுக் குழிகளும், 90.30 கி.மீ. நீளத்துக்கு கழிவு நீர் சேகரிப்பு குழாய்களும், 9 கழிவு நீர் உந்து நிலையம், 2 கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவை கட்டப்படவுள்ளது. இந்த பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பணிகள் மேற்கொள்ளும்போது பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கையாள தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாகூர்- நாகப்பட்டினம் வரை நகராட்சிப் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் ஏற்பட்டுள்ள பழுதுகளை சீர்செய்யும் பணிகள் தொடங்கியுள்ளன. மழைகாலத்துக்குள் சாலையின் இருபுறங்களிலும் உள்ள கழிவு நீர் வாய்க்கால்களை சீர் செய்யவும், சேர்ந்துள்ள மணல்களை அப்புறப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றார் ஆட்சியர்.

ஆட்சியரின் இந்த ஆய்வின்போது, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் எஸ். ராசேந்திரன், உதவி செயற்பொறியாளர் எஸ். கிருஷ்ண பிரசாத், ஆணையர் சிவக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.