Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

துப்புரவுப் பணியாளர் நியமனம்: முறைகேடு செய்தால் கடும் நடவடிக்கை- மேயர் எச்சரிக்கை

Print PDF

தினமணி 21.09.2010

துப்புரவுப் பணியாளர் நியமனம்: முறைகேடு செய்தால் கடும் நடவடிக்கை- மேயர் எச்சரிக்கை


சென்னை, செப். 20: மாநகராட்சியில் துப்புரவுப் பணியாளர்கள் பணி நியமனத்தில் முறைகேடு செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகர மேயர் மா. சுப்பிரமணியம் திங்கள்கிழமை எச்சரித்துள்ளார்.

÷மாநகராட்சியில் ஒரு சில மண்டலங்களில் துப்புரவுப் பணிகளை மேற்கொள்ள தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்த முறையில் அனுமதி வழங்கப்பட்டது.

÷எனினும், ராயப்பேட்டை, மந்தைவெளி, மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் துப்புரவுப் பணி சீராக நடைபெறாததால், குப்பைகள் குவிந்து சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இது பொதுமக்களிடையே மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

÷இதையடுத்து, மீண்டும் மாநகராட்சியே அனைத்துப் பகுதியிலும் திடக்கழிவு மேலாண்மைத் துறை மூலம் துப்புரவுப் பணிகளை மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

÷இதன்படி, மாநகராட்சியில் காலியாக உள்ள 4,600 துப்புரவுப் பணியாளர் பணியிடங்களை நிரப்ப மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பதிவு மூப்பு அடிப்படையில் பரிந்துரைப் பட்டியல் அனுப்பப்பட்டு வருகிறது.

÷இதன்படி, வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை, 5-ம் வகுப்பு முதல் தேர்ச்சி பெற்றதற்கான கல்விச் சான்று, பிறப்புச் சான்று, ஜாதிச் சான்றிதழ், புகைப்படப் பிரதிகள், ரேஷன் அட்டை நகல் ஆகியவற்றுடன் மாநகராட்சியில் குறிப்பிட்ட தேதிகளில் நடக்கும் நேர்காணலில் பங்கேற்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

÷தேர்வு செய்யப்படுவோருக்கு கால முறையிலான தகுதி ஊதியமாக ரூ.4,800 மற்றும் இதர சலுகைகளும் வழங்கப்பட உள்ளன.

÷30.8.10-ல் நடத்தப்பட்ட நேர் காணலுக்குப் பின், 784 துப்புரவுப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்பின் பல்வேறு கட்டமாக இந்த நேர்காணல் நடைபெறவுள்ளது.

மேயர் எச்சரிக்கை: இந்த நிலையில், இது குறித்து மேயர் மா.சுப்பிரமணியன் திங்கள்கிழமை கூறியதாவது: துப்புரவுப் பணியாளர் பணி நியமனம் வரையறுக்கப்பட்ட தகுதி மற்றும் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு அடிப்படையில் மட்டுமே நடத்தப்பட்டு வருகிறது.

÷இதில் விதிகளை மீறி யாரேனும் முறைகேடு செய்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.