Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சி அலுவலகத்தில் மீண்டும் புரோக்கர்கள்: ஆணையரைக் கண்டதும் ஓட்டம்

Print PDF

தினமணி 22.09.2010

மாநகராட்சி அலுவலகத்தில் மீண்டும் புரோக்கர்கள்: ஆணையரைக் கண்டதும் ஓட்டம்

சேலம், செப். 21: சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் நடமாடிய இடைத் தரகர்களை மாநகராட்சி ஆணையர் டாக்டர் கே.எஸ்.பழனிச்சாமி செவ்வாய்க்கிழமை விரட்டினார்.

சேலம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெறுவது, உதவித் தொகைகள் பெறுவது போன்றவற்றுக்கு விண்ணப்பிப்பதற்காக பொதுமக்களிடம் பணம் பெற்றுக் கொண்டு சில இடைத்தரகர்கள் பணிகளை செய்து கொடுத்து வந்தனர்.

÷பிறப்பு, இறப்பு சான்றுகள் பெற்றுத் தருவதற்காக அப்பாவி பொதுமக்களிடம் இடைத்தரகர்கள் ரூ. 500 வரை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அறிந்த மாநகராட்சி ஆணையர், பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை பொதுமக்களின் வீடுகளுக்கு தபால் மூலம் அனுப்பும் புதிய திட்டத்தை அறிமுகம் செய்தார்.

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை காலை மாநகராட்சி அலுவலகத்தின் பின்புற வாயில் வழியாக காரில் வந்த ஆணையர், உள்ளே நுழைந்ததும் காரில் இருந்து இறங்கி அங்கிருந்த இடைத் தரகர்களிடம் விசாரணை நடத்தினார். இதனைக் கண்டதும் மற்ற இடைத்தரகர்கள் ஓட்டம்பிடித்தனர்.

இதைத் தொடர்ந்து நகர் நல அலுவலர் அலுவலகத்தில் வீடு தேடி வரும் பிறப்பு இறப்பு சான்றிதழ் அனுப்பும் முறையை திடீரென அவர் ஆய்வு மேற்கொண்டார். இது குறித்து அவர் கூறும்போது, சேலம் மாநகராட்சியில் இடைத் தரகர்களை ஒழிப்பதற்காக, பிறப்பு, இறப்புச் சான்றிதழ் கோருபவர்களிடம் சுய முகவரியிட்ட அஞ்சல் உறையைப் பெற்றுக் கொண்டு அந்த முகவரிக்கே சான்றிதழ்களை அனுப்பி வைத்து வருகிறோம்.

கடந்த மூன்று நாள்களில் சுமார் 175 விண்ணப்பதாரர்களுக்கு பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் அனுப்பப்பட்டுள்ளன. விண்ணப்பித்தவர்கள் தங்களுக்கு சான்றிதழ் வந்து சேரவில்லை என்றால் 94874 28080 என்ற செல்ஃபோனுக்கு தொடர்பு கொண்டு விவரங்கள் கேட்டறியலாம் என்றார் ஆணையர். நகர் நல அலுவலர் டாக்டர் பொற்கொடி, துணை ஆணையர் நெப்போலியன், மக்கள் தொடர்பு அலுவலர் ராஜா உடனிருந்தனர்.