Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வளர்ச்சி பணிகள் குறித்து அமைச்சர், அதிகாரிகள் திடீர் ஆய்வு குன்னூர் நகராட்சியில் பரபரப்பு

Print PDF

தினகரன் 29.09.2010

வளர்ச்சி பணிகள் குறித்து அமைச்சர், அதிகாரிகள் திடீர் ஆய்வு குன்னூர் நகராட்சியில் பரபரப்பு

குன்னூர், செப்.29: குன்னூர் நகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி பணிகள் குறித்து அமைச்சர், அதிகாரிகள் குழுவினர் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

குன்னூர் நகராட்சியில் நேற்று கதர் வாரியத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், கலெக்டர் அர்ச்சனா பட்நாயக், குன்னூர் எம்.ல்.ஏ சவுந்திரபாண்டியன், ஆர்.டி.ஓ ராஜூ ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

முன்னதாக நகராட்சி ஆணையர் சேகரிடம், இதுவரை மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சி பணிகள், நிறைவடையாத வளர்ச்சி பணிகள், பணி ஒதுக்கப்பட்டும் துவங்காத பணிகள், ஒப்பந்ததாரர்களால் தாமதமாகும் பணிகள் குறித்து பட்டியலை உடனடியாக வழங்க வேண்டும் என கலெக்டர் விசாரித்து உத்தரவிட்டார்.

பணிகள் முறைகேடுகள் ஏதேனும் நடைபெற்றுள்ளதா? குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள முன்னுரிமை அளிக்கப்பட்டு உள்ளதா என்பது குறித்தும் கலெக்டர் மற்றும் ஆர்.டி.ஓ ஆகியோர் தீவிரமாக ஆய்வு செய்தனர். இந்நிலையில், கலெக்டர், அமைச்சர், எம்.எல்.ஏ உள்ளிட்டோர் ஆய்வுக்கு வருவது குறித்து தனக்கு முன் கூட்டியே தகவல் தெரிவிக்காதது ஏன் என்று கூறி நகராட்சி தலைவர் ராமசாமி, அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் வளர்ச்சி மன்ற கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார்.

ஆய்வுக்கு வருவது குறித்து ஏற்கனவே தொலைபேசியில் தகவல் தெரிவித்து இருப்பதாக தெரிவித்தனர். குன்னூர் பஸ் நிலையம் அருகேயுள்ள வி.பி தெரு ஓடை மீது கான்கிரீட் தளம் அமைக்கும் பணியில் ஏற்பட்டுள்ள இடர்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் குன்னூர் பஸ் நிலையத்தில் வரைபடத்தின் உதவி மூலம் பஸ் நிலைய விரிவாக்கம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. குன்னூர் பஸ் நிலையத்தில் செயல்பட்டு வரும் தீயணைப்பு நிலையத்தை மாற்றுவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. கன்னி மாரியம்மன் கோயில் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அமைச்சருடன் நகராட்சி கவுன்சிலர்கள் முபாரக், செல்வம், செயற்குழு உறுப்பினர் அன்வர்கான் ஆகியோர் உடனிருந்தனர். மாடல் ஹவுஸ் பகுதியில் 120 பேருக்கு நீண்ட நாட்களாக பட்டா வழங்கவில்லை என்று மாவட்ட கலெக்டரிடம் அதிமுக கவுன்சிலர்கள் சத்தார், சையது முபாரக் முறையிட்டனர். இது தொடர்பாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தாசில்தாருக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

நகராட்சி பகுதியில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி பணிகள், அடிப்படை தேவைகள் குறித்து ஆலோசனை செய்ய இன்று நடைபெற உள்ள குன்னூர் நகராட்சி கூட்டத்தில் அமைச்சர் ராமச்சந்திரன் பங்கேற்க உள்ளார். நகராட்சி கூட்டத்தில் முதன்முறையாக பங்கேற்க இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குன்னூர் நகரில் அனுமதியின்றி சுற்றுச்சூழலுக்கு ஊறுவிளைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை இடிப்பது குறித்தும் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் நேற்று தீவிரமாக ஆய்வு மேற்கொண்டனர். எனவே விரைவில் குன்னூர் நகரில் அனுமதியற்ற கட்டிடங்கள் அகற்றப்பட கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.