Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

காந்தி ஜெயந்தி தினத்தில் ஆடு,மாடு வெட்டினால் கடும் நடவடிக்கை நகர்மன்ற கூட்டத்தில் முடிவு

Print PDF

தினகரன் 29.09.2010

காந்தி ஜெயந்தி தினத்தில் ஆடு,மாடு வெட்டினால் கடும் நடவடிக்கை நகர்மன்ற கூட்டத்தில் முடிவு

மார்த்தாண்டம் செப்.29: குழித்துறை நகராட்சி சாதாரண கூட்டம் நேற்று நகர்மன்ற தலைவர் பொன். ஆசைத்தம்பி தலைமையில் நடந்தது. ஆணையர் சர்தார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் இன்ஜினியர் ரமேஷ், சுகாதார அதிகாரி கிறிஸ்துதாஸ், அலுவலர் ஜெயன், மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:

ஜோசப் (மார்ச்சிஸ்ட்):

குழித்துறை நகராட்சி மக்களுக்கு தமிழக அரசின் இலவச கலர் டிவி,கேஸ் கிடைக்குமா? கிடைக்காதா? எப்போது கிடைக்கும்?

பொன்.ஆசைத்தம்பி:

விரைவில் வழங்கப்படும்.

யூஜின் (துணைத் தலைவர்):

அக்டோபர் 2ம் தேதி காந்தி பிறந்தநாளையொட்டி ஆடு, மாடு வெட்டக் கூடாது என்று விதிமுறை உள்ளது. கடந்த ஆண்டு விதிமுறை யை மீறி குழித்துறை நகராட்சி மார்க்கெட், மற்றும் பல இடங்களில் ஆடு மாடு வெட்டப் பட்டது. இதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப் பட்டது. வரும் காந்தி ஜெயந்தி விழாவின் போது வெட்ட அனுமதிக்க கூடாது.

இன்ஜினியர் ரமேஷ்:

இது குறித்து இறைச்சி வியாபாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப் பட்டுள்ளது.

ரத்தினமணி (பா.):

நகராட்சி அலுவலகம் முன்பே இறைச்சி வெட்டப் படுகிறது. அதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதா?

கிறிஸ்துதாஸ் (சுகாதார அதிகாரி):

அனுமதி இல்லை. இனி வெட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப் படும்.

சகாதேவன்( மார்க்சிஸ்ட்):

நகராட்சிக்கு சொந்தமான கடைகள் ஏலம் விடப் பட்ட நிலையில் பூட்டி கிடக்கின்றன. இதனால் நகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற் பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் தொழில் வரியும் பாக்கி உள்ளது. இதை வசூலிக்க வேண்டும்.

இன்ஜினியர்:

பூட்டப் பட்டுள்ள கடைகளுக்கு மறு டெண்டர் விட பரிசீலிக்கப் படும்.

மோசஸ் சுதிர்(மார்க்சிஸ்ட்):

குழித்துறையில் பஸ் நிலையம் அமைக்கும் பணி என்ன ஆனது?

இன்ஜினியர் :

நிலம் அடையாளம் செய்ய டிஆர்ஓவுக்கு கடிதம் கொடுக்கப் பட்டுள்ளது

யூஜின்:

பழைய தியேட்டர் சந்திப்பில் உள்ள பிரதான ஓடை அடைப்பை நகராட்சி சரிசெய்யாமல் உள்ளது. இதனால் மழை காலங்களில் சாலையில் தண்ணீர் தேங்கி குளம் போல் உள்ளது. மேலும் கடைகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்து விடுவதால் வியாபாரிகள் பாதிக்க பட்டுள்ளனர்.

சகாதேவன்:

கழிவுநீர் ஓடை ஆக்கிரமிக்கப் பட்டு இருந்தால் அதை மீட்க வேண்டும். பட்டா நிலமா? புறம்போக்கு நிலமா? என்பதை கண்டு பிடிக்க வேண்டும்.

இன்ஜினியர் :

இப்பகுதியில் கலெக்டர் நடத்திய ஆய்வின் போது அவரது பார்வைக்கு இந்தபிரச்னை கொண்டு செல்லப் பட்டுள்ளது. ஒரு வாரத்தில் ஓடை சரிசெய்யப் படும்.

சேகர் (அதிமுக):

எனது வார்டுக்கு உள்பட்ட குளத்தில் 3 ஆண்டாக பக்க சுவர் கட்டப் படாமல் உள்ளது. தெருவிளக்குகளும் எரியாமல் உள்ளன. இதனால் திருட்டு அதிகரித்து உள்ளது. எனவே நகராட்சியை கண்டித்து நான் வெளி நடப்பு செய்கிறேன்.இவ்வாறு கூறிவிட்டு அவர் வெளிநடப்பு செய்தார்.

பின்னர் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. குழித்துறை நகராட்சி கூட்டம் தலைவர் பொன்.ஆசைதம்பி தலைமையில் நடந்தது.