Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மழைநீர் வடிகாலில் கழிவு நீர் : ரூ.50 ஆயிரம் அபராதம் விதிப்பு

Print PDF

தினமலர் 30.09.2010

மழைநீர் வடிகாலில் கழிவு நீர் : ரூ.50 ஆயிரம் அபராதம் விதிப்பு

மதுரை : மழைநீர் வடிகாலில் கழிவு நீரை வெளியேற்றிய, வீடுகள், கடைகளுக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மதுரையில் அனைத்து தெருக்களிலும் மழைநீர் வடிகால் அமைக்கப்படுகிறது. பாதாள சாக்கடை பணிகள் முடிந்து விட்ட இடங்களில், மழைநீர் தேங்கக் கூடாது என்பதற்காக இத்திட்டம் நிறைவேற்றப்படுகிறது. பாதாள சாக்கடை இணைப்பு பெற வேண்டுமானால், மாநகராட்சிக்கு 100 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். அந்தந்த கட்டட உரிமையாளர்களே, சொந்த செலவில் பாதாள சாக்கடையில் இணைப்பு ஏற்படுத்திக் கொள்ளலாம்.ஆனால் சிலர், இணைப்பு பெற செலவாகும் என நினைத்து, மழைநீர் வடிகாலில் கழிவு நீரை விடுகின்றனர். இதனால் மழைநீர் வடிகால் அமைப்பதன் நோக்கமே அடிபட்டுப் போகிறது. இதுபற்றி புகார்கள் கிளம்பியதை அடுத்து, மழைநீர் வடிகாலில் கழிவு நீரை விடுவோர் மீது நடவடிக்கை எடுக்கத் துவங்கி உள்ளது

மாநகராட்சி.கமிஷனர் செபாஸ்டின் கூறியதாவது:பாதாள சாக்கடை இணைப்பு பெறாதவர்கள், உடனே அதை பெற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் புதூர், கற்பகநகர், பந்தல்குடி, ஷெனாய்நகர், சொக்கிகுளம், செல்லூர், எஸ்.எஸ்.காலனி, மேலபொன்னகரம், காமராஜர் சாலை பகுதிகளில் மழைநீர் வடிகாலில் கழிவு நீரை வெளியேற்றுவதாக புகார்கள் வந்துள்ளன. இவர்களுக்கும், சிந்தாமணி வாய்க்கால், கிருதுமால் நதியிலும் கழிவுநீரை வெளியேற்றுவோருக்கும் அபராதம் விதிக்கப்படுகிறது.பாதாள சாக்கடை இணைப்பு பெறாமல், வைகை ஆறு மற்றும் மழைநீர் வடிகாலில் கழிவு நீரை வெளியேற்றியவர்களிடம் நேற்று ஒரு நாளில் மட்டும் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை பாதாள சாக்கடை இணைப்பு பெறாதவர்கள், உடனே பெற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.