Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேர்தல் பணி செய்ய பேரூராட்சி ஊராட்சி பணியாளர்களுக்கு தடை

Print PDF

தினமலர் 04.10.2010

தேர்தல் பணி செய்ய பேரூராட்சி ஊராட்சி பணியாளர்களுக்கு தடை

உத்தமபாளையம் : ஓட்டுச் சாவடி களப் பணியாளர்களாக பணிபுரிந்து வந்த பேரூராட்சி, ஊராட்சி அலுவலர்களை இனி அப்பணிக்கு பயன்படுத்தக் கூடாது என, தேர்தல் கமிஷன் தடை விதித்துள்ளது. அடுத்தாண்டு நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலுக்கான அனைத்து பணிகளையும் தேர்தல் கமிஷன் செய்து வருகிறது. விடுபட்ட வாக்காளர்கள், புதிய வாக்காளர்களை பட்டியலில் சேர்த்தல் உள்ளிட்ட பணிகளுடன் முழுமையான இறுதி வாக்காளர் பட்டியலை தயாரிப்பதை பிரதான பணியாக செய்து வருகிறது.

இப்பணிகளில் சேர்த்தல், நீக்கல், மாற்றம், திருத்தம் ஆகியவற்றிற்காக கொடுக்கப்படும் மனுக்கள் மீதான விசாரணைக்கு பள்ளி ஆசிரியர்கள், பல்வேறு துறைகளின் அரசு ஊழியர்கள், பேரூராட்சி பணியாளர்கள், ஊராட்சி உதவியாளர்கள் ஆகியோர் பயன்படுத்தப்பட்டு வந்தனர். இவர்கள் நேரடியாக மனுதாரர் வீட்டிற்கே சென்று விசாரணை மேற்கொண்டு, சான்றிதழ்களை சரிபார்த்து அம்மனுக்களை தேர்தல் பிரிவில் சமர்ப்பித்து வந்தனர்.

இவர்களில் பேரூராட்சி, ஊராட்சி அலுவலர்கள் விசாரணை செய்து சமர்ப்பிக்கும் மனுக்களில் பல்வேறு குளறுபடிகளும், முழுமை பெறாமலும் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இது தவிர இவர்களில் பலர் நேரடியாக களப்பணியில் ஈடுபடாமல் தங்களுக்கு தெரிந்த விவரங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கின்றனர். இவ்வாறு செய்வதால் ஏராளமான வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கப்படாமல் விடுபடுகின்றனர். கீழ்நிலை பணியாளர்கள் என்பதால் இந்த தவறுகள் குறித்து இவர்களிடம் விசாரணை மேற்கொள்ளவோ, துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவோ சாத்தியமில்லாத நிலை உள்ளது.

எனவே இப்பணியாளர்களை இம்மாதம் முதல் இப்பணிகளில் பயன்படுத்தக் கூடாது என, தடை விதித்து தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. இவர்களுக்கு பதிலாக பள்ளி ஆசிரியர்களை கூடுதலாக பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.