Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கட்டுமானப்பணி பற்றி தகவல் தராத மாநகராட்சி இன்ஜினியருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்

Print PDF

தினகரன் 07.10.2010

கட்டுமானப்பணி பற்றி தகவல் தராத மாநகராட்சி இன்ஜினியருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்

புதுடெல்லி, அக். 7: டெல்லி மாநகராட்சி சார்பில் துவாரகா பகுதியில் நடந்து வரும் கட்டுமானப் பணி பற்றிய விவரங்களை தெரிவிக்குமாறு தீரஜ் சேகல் என்பவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டிருந்தார். மாநகராட்சியின் பொது தகவல் அதிகாரியும், செயற்பொறியாளருமான (கட்டிடம்) எஸ்.ஆர்.லக்கன், தகவல் தர மறுத்து விட்டார்.

இதனால், லக்கனின் மேலதிகாரியை சந்தித்து தீரஜ் முறையிட்டார். அதன்பிறகும் லக்கன் தகவலைத் தரவில்லை. அதைத் தொடர்ந்து, மாநில தகவல் ஆணையத்தில் தீரஜ் புகார் அளித்தார். தீரஜ் கேட்கும் தகவலைத் தரும்படி மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டும், லக்கன் கேட்கவில்லை.

அதனால் மத்திய தகவல் ஆணையத்தில் தீரஜ் மனுதாக்கல் செய்தார். அதை மத்திய தகவல் ஆணையர் சைலேஷ் காந்தி விசாரித்து பிறப்பித்த உத்தரவு வருமாறு:

துவாரகா பகுதியில் நடந்து வரும் கட்டுமானப் பணி பற்றிய விவரங்களைத் தர திட்டவட்டமாக லக்கன் மறுத்துள்ளார். மேலதிகாரி நினைவுப்படுத்தியும், மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டும் அவர் தகவலைத் தர மறுத்து விட்டார். தகவலைத் தர மறுத்ததற்கான காரணத்தையும் சொல்ல லக்கன் முன்வரவில்லை.

தகவலைத் தர மறுத்ததற்கான காரணத்தை விளக்க அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டபோதும், அவர் எந்த விளக்கத்தையும் அளிக்க முடியாது என்று தீர்மானித்து விட்டார். அதனால், லக்கனுக்கு அபராதம் விதிக்க பொருத்தமான வழக்காக இது உள்ளது என்று ஆணையம் முடிவு செய்கிறது. தகவலைக் கேட்டு 100 நாட்களுக்கு மேலாகியும் சரியான விவரங்களை அளிப்பதில் தாமதம் செய்த லக்கனுக்கு, தகவலறியும் உரிமைச்சட்டத்தின்கீழ் அதிகபட்ச அபராதத்தொகையான ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. இவ்வாறு சைலேஷ் காந்தி உத்தரவிட்டுள்ளார்.