Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வடகிழக்கு பருவ மழையை சமாளிக்க ஆயத்த நிலையில் மாநகராட்சி: ஆணையர் கார்த்திகேயன் பேட்டி

Print PDF

தினமணி 07.10.2010

வடகிழக்கு பருவ மழையை சமாளிக்க ஆயத்த நிலையில் மாநகராட்சி: ஆணையர் கார்த்திகேயன் பேட்டி

சென்னை, அக்.6: வட கிழக்கு பருவ மழையைச் சமாளிக்க ஆயத்த நிலையில் இருப்பதாக சென்னை மாநகராட்சி ஆணையர் தா.கார்த்திகேயன் தெரிவித்தார். இதுகுறித்து, அவர் புதன்கிழமை நிருபர்களிடம் கூறியது:

வடகிழக்கு பருவ மழையைச் சமாளிக்க போதிய முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை மாநகராட்சி மேற்கொண்டுள்ளது. இதுவரையில் சுமார் 600 கிலோ மீட்டர் நீள மழைநீர் வடிகால்வாய் தூர்வாரப்பட்டுள்ளது. அடுத்த ஒரு வாரத்தில் 200 கிலோ மீட்டர் நீளத்துக்கு மழைநீர் வடிகால்வாய் சுத்தம் செய்யும் பணி முடிவடையும். மழைநீர் அதிகம் தேங்கும் பகுதிகள் எவை எனக் கண்டறியப்பட்டு, அங்கு மழைநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு பொதுமக்களைக் கொண்டு செல்ல போதிய முன்னேற்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநகராட்சியின் கீழ் உள்ள 12 சுரங்கப் பாதைகளில் மழை நீரை உடனே வெளியேற்ற 12 மின் மோட்டார்கள் வைக்கப்பட்டுள்ளன. மேலும், மண்டல அலுவலகங்களில் எங்கும் எளிதாக எடுத்துச் செல்லும் வசதியுடன் கூடிய 88 மின் மோட்டார்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

÷இத்துடன் ஒரு மணி நேரத்தில் 8 ஆயிரம் உணவுப் பொட்டலங்கள் தயார் செய்ய உணவுக் கூடங்களும் தயார் நிலையில் உள்ளன. மழைக்கால நிலைமை மோசமடையும் பட்சத்தில், ஒவ்வொரு மண்டலத்துக்கு ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி நியமிக்கப்பட்டு, கண்காணிப்பு மற்றும் அவசரகால பணிகள் மேற்கொள்ளப்படும். கழிவுநீர் வடிகால்வாயில் ஓடும் நீரை, மழைநீர் வடிகால்வாயில் திருப்பிவிடும்போது, சென்னை குடிநீர் வாரியத்தின் நீரேற்று நிலையங்களில் அழுத்தம் ஏற்பட்டு, மேலும் சிக்கலுக்கு வழிகோலும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மழைநீர் வடிகால்வாயில், கழிவுநீரை திருப்பி விடக்கூடாது என தலைமைச்செயலர் மாலதி அறிவுறுத்தியுள்ளார். பள்ளிகள் இல்லாமல், 54 மீட்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளன என்றார் ஆணையர் கார்த்திகேயன்.