Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வசாய்&விரார் மாநகராட்சி பகுதியில் 22,335 சட்டவிரோத கட்டுமானங்களை இடித்து தள்ள அதிகாரிகள் தயக்கம்

Print PDF

தினகரன் 08.10.2010

வசாய்&விரார் மாநகராட்சி பகுதியில் 22,335 சட்டவிரோத கட்டுமானங்களை இடித்து தள்ள அதிகாரிகள் தயக்கம்

விரார்,அக்.8: வசாய்&விரார் பகுதியில் இருக்கும் 22,335 சட்டவிரோத கட்டுமானங்கள் அரசியல் செல்வாக்கு மற்றும் ஊழல் காரணமாக இடிக்கப்படாமல் இருப்ப தாக கூறப்படுகிறது.

வசாய்&விரார் பகுதியில் 22,335 சட்டவிரோத கட்டிடங்களும், மீராபயந்தர் பகுதியில் 13,916 சட்டவிரோத கட்டிடங்களும் இருக்கின்றன. இக்கட்டிடங்கள் அனைத்தும் 5 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டவை ஆகும். ஆனால் அவற்றை சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் இடிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அரசியல் செல்வாக்கு மற்றும் ஊழல் காரணமாக இது வரை 1250 சட்டவிரோத கட்டிடங்கள் மட்டுமே இடிக்கப்பட்டுள்ளது என்று தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. சட்டவிரோத கட்டுமானங்களை வைத்திருப்பவர்கள் அதிக அளவு லஞ்சம் கொடுத்து இடிக்கப்படவேண்டிய சட்டவிரோத கட்டிடங்கள் பட்டியலில் தங்களது பெயரை மிகவும் பின்னுக்கு தள்ளி விடுகின்றனர். அல்லது ஏதாவது கோர்ட்டில் தடை பெற்று விடுகின்றனர்.

இது வரை 2000 தடை உத்தரவுகள் பெறப்பட்டுள்ளன. சட்டவிரோத கட்டுமானத்தை இடிக்க நோட்டீஸ் அனுப்பி விட்டால் சம்மந்தப்பட்டவர் உடனே ஏதாவது ஒரு அரசியல்வாதியின் துணையோடு அதனை தடுத்து நிறுத்தி விடுவதாக மீராபயந்தர் மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூலை மாதம் வசாய் தாசில்தாராக இருந்த கே.படானே அரசு நிலத்தில் சட்டவிரோதமாக கட்டிடங்களை கட்டியிருந்த 13,944 பேருக்கு நோட்டீஸ் அனுப்பினார். மேலும் அவற்றை வரும் டிசம்பர் மாதத்திற்குள் இடிக்கவும் இலக்கு நிர்ணயித்திருந்தார். இந்த நிலையில், அவர் அரசியல்வாதிகளின் நிர்ப்பந்தம் காரணமாக வேறு இடத்திற்கு மாற்றப்பட்டார்.

அதோடு சட்டவிரோத கட்டுமானங்களை இடிக்க போதிய போலீஸ் பாதுகாப்பும் தங்களுக்கு கிடைப்பதில்லை என்று மீராபயந்தர் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சட்டவிரோத கட்டுமானங்களை கட்ட போலீசாரும் லஞ்சம் வாங்கிக்கொண்டு அனுமதிப் பதாகவும் மாநகராட்சி அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

சமீபத்தில் மாநில அரசு இந்த சட்டவிரோத கட்டுமானங்களை இடிக்கும் பணி இந்த மாதமே தொடங்கும் என்று உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. ஆனால் அதற்கான அறிகுறிகள் இதுவரை தென்படவில்லை.