Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வீடு, வர்த்தக நிறுவனங்கள் வாசலில் குப்பை கொட்டினால் அபராதம்: மேயர்

Print PDF

தினமணி 14.10.2010

வீடு, வர்த்தக நிறுவனங்கள் வாசலில் குப்பை கொட்டினால் அபராதம்: மேயர்

மதுரை, அக். 13: மதுரை மாநகராட்சிப் பகுதிகளிலுள்ள வீடுகள், கடைகள், வர்த்த நிறுவனங்கள் வாசல் முன்பு குப்பைகளைக் கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி மேயர் தேன்மொழி எச்சரித்துள்ளார்.

மதுரை மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை மேயர் தேன்மொழி தலைமையில் துணை மேயர் பி.எம். மன்னன் முன்னிலையில் நடைபெற்றது. இதில் குப்பைகளை அகற்றுதல், குடிநீர் இணைப்பு மற்றும் பாதாளச் சாக்கடை இணைப்பு வேண்டியும், நெல்பேட்டை மீன் மார்க்கெட் பகுதியில் குடிநீர் இணைப்பு வேண்டியும், வில்லாபுரம் பகுதியில் குடிநீர் விநியோக நேரத்தை மாற்றி மீண்டும் காலையிலேயே குடிநீர் விநியோகம் செயய்க் கோரியும் மனுக்கள் பெறப்பட்டன.

இந்த மனுக்களை பரிசீலித்த மேயர் தேன்மொழி, உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். குடிநீர் மற்றும் பாதாளச் சாக்கடை இணைப்பு வேண்டுவோர் மாநகராட்சியை அணுகிப் பெற்றுக் கொள்ளுமாறு தெரிவித்தார்.

மேலும் வீடுகள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள் குப்பைகளை சாலைகளில் கொட்டிவிட்டுச் செல்கின்றனர். அவ்வாறு குப்பை கொட்டுவோர் வார்டு சுகாதார ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என்றார்.

முன்னதாக, பழுதடைந்த அழகர் திருமண மண்டபத்தை பார்வையிட்ட மேயர், மண்டபத்தை மராமத்து செய்து புதுப்பிக்குமாறு கேட்டுக்கொண்டார். புதிதாக கட்டப்பட்டு வரும் சத்துணவுக்கூடம், நூலக கட்டடப் பணிகளை விரைந்து முடிக்குமாறும் ஒப்பந்ததாரர்களை கேட்டுக் கொண்டார்.

மேலும் புதுமாகாளிபட்டி ரோட்டிலுள்ள புதிய சமுதாயக்கூடம் கட்டுவதற்கு இடம் தேர்வு மற்றும் முனிச்சாலை மகப்பேறு மருத்துவமனை புதிய கட்டடப் பணிகளை பார்வையிட்ட மேயர் அவரை விரைந்து முடிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை ஆணையர் க. தர்ப்பகராஜ், தலைமைப் பொறியாளர் கே.சக்திவேல், கண்காணிப்புப் பொறியாளர் ஆர். விஜயகுமார், மண்டலத் தலைவர் வி.கே.குருசாமி, உதவி ஆணையர் (கிழக்கு) அங்கயற்கண்ணி, நிர்வாகப் பொறியாளர் ராஜேந்திரன், மக்கள் தொடர்பு அதிகாரி இரா.பாஸ்கரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.