Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

திட்டப் பணிகளை முடிக்காத ஒப்பந்ததாரர்களின் உரிமம் ரத்து

Print PDF

தினமணி 14.10.2010

திட்டப் பணிகளை முடிக்காத ஒப்பந்ததாரர்களின் உரிமம் ரத்து

மன்னார்குடி, அக். 13: குறித்த காலத்தில் பணியை முடிக்காத ஒப்பந்ததாரர்களின் உரிமத்தை ரத்துசெய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், அந்தப் பணிகள் வேறு நபர்களுக்கு ஒதுக்கப்படும்

என்றார் மன்னார்குடி நகராட்சி ஆணையர் எஸ். மதிவாணன். மன்னார்குடி நகர்மன்றக் கூட்டம் அதன் தலைவர் தலைவர் த. கார்த்திகா தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆணையர் எஸ். மதிவாணன், பொறியாளர் ஏ. முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் உறுப்பினர்களின் விவாதம்:

வி. மதியரசன்: ஓர் ஆண்டுக்கும் மேலாக வடசேரி சாலையில் எரிவாயு தகனமேடை அமைக்கும் பணிகள் முழுமை பெறாமல் உள்ளன. பணியை முடிப்பதற்கான காலம் கடந்தும் இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் தெளிவான விளக்கம் அளிக்காதது ஏன்?

ஜி. ராஜாசந்திரசேகரன்: காந்தி காய்கனி அங்காடி, உடையார் தெரு இணைப்பு சாலையில் குடியிருப்புப் பகுதி கழிவுநீர் செல்ல ரூ 2 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும் திட்டப் பணியை தொடங்குவதில் தொடர்ந்து மெத்தனப்போக்கு நிலவுகிறது.

எம்.எஸ். வீரக்குமார்: தாமரைக்குளம் பகுதியில் ஒருங்கிணைந்த மீன் அங்காடிக்கு புதிய கட்டடம் கட்டும் பணி தொடங்கப்படாததால், சாலை ஓரத்தில் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால், சுகாதாரச் சீர்கேடு ஏற்படுவதுடன், அந்தப் பகுதியில் குடியிருப்பவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

கை. கலைவாணன்: நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் பாரபட்சம் பார்க்காது ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வி. கண்ணதாசன்: பெரியக் கடைத்தெரு பள்ளிவாசல் அருகே வர்த்தக நிறுவனங்களிலிருந்து வெளியேற்றப்படும் குப்பைகளை அகற்றும் பணி நீண்ட நாள்களாக மேற்கொள்ளப்படாததால், குப்பைகள் மலைபோல குவிந்துகிடக்கின்றன.

ஏவிபி கோபி: மக்களவை அதிமுக முன்னாள் உறுப்பினர் நடிகர் எஸ்.எஸ். சந்திரன் மன்னார்குடியில் மாரடைப்பால் மறைவுற்றதற்கு இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.

ஆணையர்: எரிவாயு தகனமேடை, மீன் அங்காடி உள்ளிட்ட திட்டப் பணிகளை மேற்கொள்ள நகராட்சி நிர்வாகத்தின் காலக்கெடுவை ஏற்றுக்கொண்டு, கட்டுமானப் பணியை பாதியில் நிறுத்தியும், திட்டப் பணிகளை தொடங்காதும் உள்ள ஒப்பந்ததாரர்கள் ஒரு மாத காலத்திற்குள் பணிகளை தொடங்கவில்லை என்றால், அவர்களின் ஒப்பந்தத்தை ரத்துசெய்ய துறைவாரியாக நடவடிக்கை எடுக்கப்படும். உடையார் தெருவில் கழிவுநீர் வடிகால் விரைவில் அமைக்கப்படும். குப்பைகள் உடனுக்குடன் அள்ளப்படுகிறதா எனக் கண்காணிக்கப்படும்.

தலைவர் த. கார்த்திகா: கொசுஒழிப்பு மருந்து மழைகாலம் முடியும் வரை நாள்தோறும் அடிக்கப்படும். 29 சாலைப் பணிகளுக்கு ரூ 4.93 கோடி நிதி வழங்கிய தமிழக முதல்வர், துணை முதல்வர் ஆகியோருக்கும், நீடாமங்கலம், மன்னார்குடி, பட்டுக்கோட்டை வழித்தடத்தில் புதிய அகல ரயில் பாதை அமைக்க ஒத்துழைப்பு வழங்கிய மத்திய ரயில்வே நிலைக்குழுத் தலைவர் டி.ஆர். பாலு எம்பிக்கும் நகர்மன்றம் நன்றி தெரிவித்துக்கொள்கிறது.