Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

திண்டுக்கல்லில் பாதாள சாக்கடை பணி விரைவில் முடிக்கப்படும் அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்

Print PDF

தினகரன் 18.10.2010

திண்டுக்கல்லில் பாதாள சாக்கடை பணி விரைவில் முடிக்கப்படும் அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்

திண்டுக்கல், அக். 18: திண்டுக்கல் நகரில் பாதாள சாக்கடை திட்ட பணி விரைவில் முடிக்கப்படும் என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார். திமுக இளைஞரணி அறக்கட்டளையின் சார்பில் அண்ணாவின் 102வது பிறந்த நாளை முன்னிட்டு திண்டுக்கல்லில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பேச்சு, கட்டுரை, கவிதை ஒப்புவித்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டி நடைபெற்றது. வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு அமைச்சர் ஐ.பெரியசாமி பரிசு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட இளை ஞரணி துணை அமைப்பாளர் செந்தில்குமார், அமைப்பாளர் அசன்முகமது, துணை செயலாளர் சந்திரசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின் அமைச்சர் நிருபர்களிடம் கூறியதாவது:

திண்டுக்கல் நகராட்சி பகுதியில் புதிய சாலைகள் அமைக்க ரூ.25 கோடி நிதியை துணை முதல்வர் ஒதுக்கியுள்ளார். இந்த நிதியில் புதிய சாலைகள் அமைக்கப்படும். மற்ற நகராட்சிகளை விட திண்டுக்கல் நகராட்சிக்கு அரசு அதிக நிதி ஓதுக்கீடு செய்து வருகிறது. திண்டுக்கல்லில் பாதாள சாக்கடை பணிகளை ஒப்பந்தம் செய்துள்ள ஒப்பந்தகாரர்கள் காலதாமதத்தால் இப்பணி முடிக்க சிறிது தாமதம் ஏற்பட்டது. தற்போது 90 சதவீத பணிகள் முடிந்துவிட்டது. மீதமுள்ள 10 சதவீத பணிகள் விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பழநியில் புதிய நீதிமன்றம் கட்ட ரூ.2.50 கோடி அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. புதிய கட்டிட பணி நவம்பர் முதல் வாரத்தில் துவக்கப்படும்.

திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டு அருகில் இருக்கும் ஒருங்கிணைந்த நீதிமன்றம் கலெக்டர் அலுவலகம் அருகில் மாற்றப்படுகிறது. இதனால் அங்கு புதிய ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்ட 8 ஏக்கர் நிலம் கொடுக்கப்படுகிறது. நீதிமன்ற ஊழியர்கள் குடியிருப்புக்கு கூடுதலாக 2 ஏக்கர் நிலம் கேட்டுள்ளனர். 2 ஏக்கர் நிலமும் விரைவில் வழங்கப்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.