Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மீன் மார்க்கெட் வாடகை வசூலை மாநகராட்சி ஏற்றது 2 அதிகாரி மீது நடவடிக்கை

Print PDF

தினகரன் 20.10.2010

மீன் மார்க்கெட் வாடகை வசூலை மாநகராட்சி ஏற்றது 2 அதிகாரி மீது நடவடிக்கை

மதுரை, அக். 20: நெல்பேட்டை மீன் மார்க்கெட்டில் அன்றாட கடை வாடகை வசூலை மாநகராட்சி ஏற்றது. பிரச்னையில் சிக்கிய 2 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை நெல்பேட்டை மாநகராட்சி மீன் மார்க்கெட்டில் வியாபாரிகள் இரு தரப்பினரிடையே கடந்த வாரம் மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் மாறி மாறி புகார் கூறி வந்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக பாரபட்சமின்றி எது சரியோ அதன்படி நியாயமான நடவடிக்கை எடுத்து சுமுக தீர்வு காணும்படி அதிகாரிகளுக்கு மேலிடம் ஆலோசனை அளித்தது.

அதன்படி மாநகராட்சியும், போலீசாரும் இணைந்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். மார்க்கெட்டில் அன்றாட கடை வாடகை வசூலை தனியாரிடம் இருந்து பறித்து மாநகராட்சி ஏற்றது. அங்கு ஒரு தரப்பினரால் அடைத்து வைக்கப்பட்டிருந்த மாநகராட்சி தண்ணீர் குழாய் திறக்கப்பட்டது. மூடி வைக்கப்பட்டிருந்த பொது கழிப்பிடம் பயன்பாட்டிற்கு வந்தது.

இந்த விவகாரத்தில் ஒரு தரப்பினருக்கு அனுசரணையாக இருந்ததாக புகார் கூறப்பட்ட மாநகராட்சி பொறியாளர் விஜயகுமார், மற்றும் மார்க்கெட் சார்ந்த போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கும்படி மேல் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி மாநகராட்சி பொறியாளர் மாறுதல் செய்யப்படுவாரா? அல்லது வேறு நடவடிக்கையா? என்பது குறித்து தீவிர பரிசீலனை நடந்து வருகிறது. இந்த அதிரடி நடவடிக்கைகள் மூலம் மீன் மார்க்கெட்டில் நிலவிய நீண்ட நாள் பிரச்னைக்கு தீர்வு ஏற்பட்டுள்ளது, இனிமேல் மார்க்கெட் வழக்கம் போல் இயங்கும் என வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.