Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நடைபாதை வியாபாரிகளுக்கு உரிம கட்டண தீர்மானம் ஒத்திவைப்பு

Print PDF

தினமணி 20.10.2010

நடைபாதை வியாபாரிகளுக்கு உரிம கட்டண தீர்மானம் ஒத்திவைப்பு

கோவை, அக்.19: கோவை மாநகராட்சி பகுதியில் உள்ள நடைபாதை வியாபாரிகளுக்கு உரிமம் வழங்கக் கட்டணம் நிர்ணயிக்கும் தீர்மானம் வரி விதிப்பு மற்றும் நிதிக்குழு கூட்டத்தில் ஒத்தி வைக்கப்பட்டது.

கோவை மாநகராட்சி வரி விதிப்பு மற்றும் நிதிக்குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை மாநகராட்சி கூட்ட அரங்கில் நடந்தது. தலைவர் அ.நந்தகுமார் தலைமை வகித்தார். உதவி ஆணையர் (வருவாய்) சுந்தரராஜன் மற்றும் நிதிக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். இதில் வரி விதிப்பு மற்றும் நிதி ஒதுக்கீடு தொடர்பான 9 தீர்மானங்கள் மீது விவாதம் நடந்தது.

மாநகராட்சி பள்ளிகளில் தூய்மைப் பணி, காவல் பணி மேற்கொள்ள பணியாளர்கள் மற்றும் காவலர்களை நியமிக்க ரூ. 45 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பீட்டிற்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது.

மாநகராட்சி எல்லையில் உள்ள 3 ஆயிரம் நடைபாதை வியாபாரிகளுக்கு தினசரி ரூ. 40 பெற்று உரிமம் வழங்க ஒப்புதல் கோரிய தீர்மானம் ஒத்திவைக்கப்பட்டது.

பொது மக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் வியாபாரம் நடைபெறும் வகையிலான ஏற்பாடுகள் குறித்து கலந்தாலோசித்த பின்னர், உரிம கட்டணம் குறித்து விவாதிக்கலாம் என உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

பூ மார்க்கெட் கடை ஏலம், காந்திபுரம் மத்திய பேருந்து நிலைய கடைகளின் பயனாளிகள் பெயர் மாற்றம் செய்தல், மாநகராட்சி மேற்கு மண்டல வணிக வளாக கடைகளை ஏலதாரர்களுக்கு ஒதுக்கீடு செய்தல் ஆகிய பொருள்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. நிதிக்குழு உறுப்பினர்கள் செந்தில்குமார், ராஜேந்திர பிரபு, ஹேமலதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.