Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பார்க்கிங் இல்லாத ஹோட்டல், வணிக வளாகம்

Print PDF

தினமலர் 21.10.2010

பார்க்கிங் இல்லாத ஹோட்டல், வணிக வளாகம்

திருச்சி: சென்னைக்கு அடுத்தபடியாக தொழில்துறை, கல்வி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களிலும் வேகமாக வளர்ந்து வரும் நகரம் என்று பார்த்தால் திருச்சி தான் முதலிடத்தில் உள்ளது. அப்படிப்பட்ட திருச்சியில் சென்னையை விட அதிகமாக போக்குவரத்து நெரிசல், மக்களுக்கு இடையூறும் ஏற்படுகிறது.அதற்கு மாநகரின் முக்கிய இடங்களில் உள்ள பெரிய ஹோட்டல்கள், வணிக வளாகங்கள் பலவற்றுக்கு தனியாக பார்க்கிங் இடம் இல்லாததும், பொது இடங்களை தனியார் ஆக்கிரமித்துள்ளதும் தான் காரணம். பார்க்கிங் இடம் இல்லை என்பதால் முக்கிய சாலைகளை ஹோட்டல்களும், வணிக வளாகங்களும் ஆக்கிரமித்து விடுகின்றன.அவர்களுக்கு இருக்கும் அரசியல் செல்வாக்கால் இதைப்பற்றி கண்டு கொள்ள வேண்டிய மாநகராட்சி அதிகாரிகளும், போலீஸாரும் பாராமுகமாய் உள்ளனர்.திருச்சி மாநகரில் நெரிசல் மிகுந்த இடங்கள் என்று பார்த்தால் மத்திய பஸ்ஸ்டாண்ட், சத்திரம் பஸ்ஸ்டாண்ட், என்.எஸ்.பி., ரோடு (பெரிய கடைவீதி), சிங்காரத்தோப்பு, ஸ்ரீரங்கம், காந்திமார்க்கெட், பாலக்கரை ஆகிய பகுதிகளை எடுத்துக் கொள்ளலாம்.

மேற்கண்ட பகுதிகளில் தான் நாள்தோறும் ஆயிரக்கணக்கில் மக்கள் புழக்கம் இருக்கும். ஆனால், இந்த இடங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலும், தனியார் ஆக்கிரமிப்பால் பொதுமக்கள் படும் அவஸ்தையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளன.மத்திய பஸ்ஸ்டாண்டை பொறுத்தவரை பஸ்ஸ்டாண்டை சுற்றியுள்ள பல ஹோட்டல்களுக்கு முறையான பார்க்கிங் வசதி கிடையாது. அப்படியிருந்தும் அவர்கள் ஹோட்டல் நடத்துகின்றனர்.பார்க்கிங் இல்லாத ஹோட்டல் நிர்வாகத்தினர் முக்கிய சாலைகளில் தங்களின் ஹோட்டலுக்கு வரும் கார்களை, போக்குவரத்து போலீஸாரை சரிகட்டி, நிறுத்த வைக்கின்றனர். பஸ்ஸ்டாண்ட் பகுதியில் தி.மு.., .தி.மு.., கம்யூனிஸ்ட் என்று அனைத்து கட்சி ஆதரவு பெற்றவர்களும் ஹோட்டல் நடத்தி வருகின்றனர். அவர்களின் அரசியல் செல்வாக்கினால், போலீஸாரும் கண்டுகொள்வதில்லை.ஹோட்டல்களால் போக்குவரத்து நெரிசல் என்றால், பஸ்ஸ்டாண்டை சுற்றியுள்ள வணிக வளாகங்கள் மற்றும் தனியார் ஆம்னி பஸ் அலுவலகங்களினாலும் கடுமையாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், தினமும் ஆயிரக்கணக்கில் வந்து செல்லும் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.அதேபோல், பெரியகடை வீதியில் உள்ள முக்கிய நிறுவனங்கள் பல பார்க்கிங் வசதி இல்லாமல் செயல்பட்டுகின்றன. அவர்களையெல்லாம் மாநகராட்சி அதிகாரிகள் கண்டு கொள்ளாததற்கு மாமூலான காரணமே கூறப்படுகிறது.

ஸ்ரீரங்கத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு முழுக்க, முழுக்க போக்குவரத்து போலீஸாரே காரணம்.சிங்காரத்தோப்பில் உள்ள சில வணிக வளாகங்களுக்கும், ஹோட்டல்களுக்கும் பார்க்கிங் இடம் என்பதே முக்கிய சாலைகள் தான். பாலக்கரையில் பஸ்கள் செல்லும் பாதையை நடைபாதை வியாபாரிகள் ஆக்கிரமித்து இடையூறாக உள்ளனர்.காந்தி மார்க்கெட் பகுதியும் நடைபாதை வியாபாரிகளாலும், மளிகைக்கடைகளாலும் ஆக்கிரமிக்கப்பட்டு தினமும் போக்குவரத்து நெரிசலும், மக்கள் நடக்கக்கூட சிரமப்படும் நிலையும் ஏற்படுகிறது.இப்படியாக சென்னைக்கு அடுத்தபடியாக வேகமாக வளர்ந்து வரும் திருச்சி நகர முக்கிய சாலைகள் அரசியல் செல்வாக்குள்ள ஹோட்டல், வணிக வளாகங்கள், தனியார் ஆம்னி பஸ் நிறுவனங்களால் ஆக்கிரமிக்கப்படுவதால், தினமும் கடுமையான போக்குவரத்து நெரிசலை சந்தித்து வருகிறது.திருச்சி மாநகர வளர்ச்சிக்கு தடையாக உள்ள பார்க்கிங் இல்லாத ஹோட்டல் மீதும், வணிக வளாகம் மீதும் மாநகராட்சி அதிகாரிகளும், போக்குவரத்து போலீஸாரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் ஒட்டு மொத்த கோரிக்கையாகும்.