Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சி அலுவலகத்தில் ஒப்பந்ததாரர்களுக்கு புதிய கட்டுபாடு

Print PDF

தினகரன்               28.10.2010

மாநகராட்சி அலுவலகத்தில் ஒப்பந்ததாரர்களுக்கு புதிய கட்டுபாடு

கோவை, அக்.28:கோவை மாநகராட்சி அலுவலகத்திற்குள் ஒப்பந்தாரர்களுக்கு கட்டுபாடு விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து தகவல்களையும் ஆன்லைனில் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சியில் பிரதான அலுவலகம், மண்டல, வார்டு அலுவலகம், சுகாதார பிரிவு அலுவலகங்கள், பொறியியல், குடிநீர் பிரிவு அலுவலகங்கள் செயல்படுகிறது. மாநகராட்சியில் 90க்கும் மேற்பட்ட ஒப்பந்தாரர்கள் உள்ளனர்.

குடிநீர், சாக்கடை கால்வாய், ரோடு, கட்டுமானம், பாலம் உள்ளிட்ட மாநகராட்சியின் அனைத்து பணிகளும் ஒப்பந்தம் மூலம் செய்ய ஒப்படைக்கப்படுகிறது. பல ஆண்டுகாலமாக, மாநகராட்சியில் ஒப்பந்தாரர்களின் ஆதிக்கமே அதிகமாக இருந்தது. சில அதிகாரிகள் ஒப்பந்தாரர்களுடன் நெருக்கமான நட்பில் இருப்பதாக தெரியவந்துள்ளது.

இதனால் பணிகளில் முறைகேடு அதிகரித்து வருவதாக புகார் எழுந்தது. அலுவலக பிரிவில், அதிகாரிகள் அறைக்குள் ஒப்பந்தாரர்கள் சிலர் மணிக்கணக்கில் பேசி கொண்டிருப்பதாக நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. இதை தொடர்ந்து மாநகராட்சியின் அனைத்து பிரிவு அதிகாரிகளும் எச்சரிக்கப்பட்டனர். ஒப்பந்ததாரர்கள் தொழில் ரீதியாக மாநகராட்சி அலுவலகங்களுக்கு வருவதை வெகுவாக தவிர்க்கும் வகையில் திட்டங்கள் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. முதல் கட்டமாக இ டெண்டர் முறை கொண்டு வரப்பட்டது.

ஒப்பந்த விவரங்கள், தகவல்கள் ஆன்லைனில் பெறப்படவேண்டும். முறையாக, மாநகராட்சியிடம் ஒப்பந்த நிறுவனங்கள் அனுமதி பெறவேண்டும். அவர்கள் வங்கி கணக்கு விவரங்களை தெரிவிக்கவேண்டும் என கட்டுபாடு விதிக்கப்பட்டது. மாநகராட்சி அனுமதி பெற்ற ஒப்பந்த நிறுவனங்கள் மட்டுமே டெண்டரில் பங்கேற்க முடியும் என்ற நிலை உருவாக்கப்பட்டது. அனுமதி பெற்ற ஒப்பந்த நிறுவனங்கள், ஆன்லைன் மூலம் மாநகராட்சி டெண்டரில் பங்கேற்க வாய்ப்பு தரப்பட்டது. டெண்டரில் பணிகளை எடுத்து, முற்றிலும் முடித்த பின்னர் காசோலை வழங்கப்படுகிறது. காசோலையை நேரிடையாக வழங்காமல், ஒப்பந்த நிறுவனங்களின் வங்கி கணக்கிற்கு அனுப்பும் நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. மாநகராட்சி டெண்டர் திறக்கப்பட்டால், குறைந்த தொகை கேட்ட நிறுவனங்களின் ஒப்பந்தம் ஏற்கப்பட்டு ஆன்லைனில் பதில் தரும் வழக்கமும் வந்து விட்டது.

இதன் மூலம் மாநகராட்சி அலுவலகங்களுக்கு ஒப்பந்ததாரர்கள் வரவேண்டிய அவசியம் இல்லாத நிலை உருவாக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி அலுவலகத்தில் டெண்டர் பெட்டிவைக்கும் நடைமுறை முடிவிற்கு வந்து விட்டது. கட்டுபாடுகளை மதிக்காமல், நட்பு ரீதியில் ஆர்வம் காட்டும் அதிகாரிகளை கண்காணிக்கவும், ஒப்பந்த நிறுவனங்களுக்கு கூடுதல் கட்டுபாடு விதிக்கவும் மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

Last Updated on Thursday, 28 October 2010 06:02