Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

புதிய கட்டட வரைபட அனுமதிக்கு நிபந்தனைகள் தளர்வு

Print PDF

தினமணி                29.10.2010

புதிய கட்டட வரைபட அனுமதிக்கு நிபந்தனைகள் தளர்வு

திருநெல்வேலி,அக்.28: புதிய கட்டட வரைபட அனுமதிக்கு நிபந்தனைகள் தளர்த்தப்பட்டுள்ளதாக திருநெல்வேலி மாநகராட்சி மேயர் அ.லெ.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

அண்மையில் புதிய கட்டட வரைபட அனுமதிக்கு விண்ணப்பிக்குபோது மனுதாரர்கள் பின்பற்ற சில வழிகாட்டுதல் முறை வெளியிடப்பட்டது. இந்த நிபந்தனைகளை தளர்வு செய்ய வேண்டும் என செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் மண்டலத் தலைவர்களும்,மாமன்ற உறுப்பினர்களும் கருத்து தெரிவித்தனர்.

இதையடுத்து அந்த நிபந்தனைகளை தளர்வு செய்வது குறித்து ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்தில் மண்டலத் தலைவர்கள்,மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இக் கூட்டத்தின் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி அனுமதிப் பெற்ற மனைப் பிரிவுக்கு வட்டாட்சியர் தடையின்மைச் சான்றிதழ்,கிராம நிர்வாக அலுவலர் சிட்டா அடங்கல்,கிராம நிர்வாக அலுவலரின் புலப்பட நகல், கிராம நிர்வாக அலுவலர் அத்தாட்சி பெற்ற நில அளவை வரைப்படம் ஆகியவை சமர்ப்பிக்கத் தேவையில்லை.

மேலும் நோட்டரி பப்ளிக் கையெழுத்து தேவையில்லை. இடம் குறித்து பிரச்னை இருந்தால் மட்டும் மனுதாரர், அரசு வழக்கறிஞரிடம் கருத்துரு பெற்றுத் தர வேண்டும்.

சூரிய அடுப்பு கட்டட வரைப்படத்தில் காட்டப்பட வேண்டும். புதிய குடிநீர் திட்டங்கள் அம்படுத்தப்படுகின்ற 1,2,3,4,8,9,10,19,26,27,31,32 பாகங்களில் புதியதாக வீடு கட்ட மனு செய்கிறவர்கள், குடிநீர் இணைப்பு பெறுவதற்கு சம்மத கடிதம் தர வேண்டும். அதற்குரிய வைப்புத் தொகையையும் செலுத்த வேண்டும்.

மேலும் கட்டட வரைபட அனுமதி வாங்க தாமதத்தை தவிர்ப்பதற்கு, மாநகராட்சியில் தற்போது செயல்படுத்தப்படும் கிரீன் சானல் திட்டம் மூலம் விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் 2 நாள்களுக்குள் அனுமதி பெற்றுவிடலாம். இது வரை இத் திட்டத்தின் மூலம் விண்ணப்பித்த 401 பேர்களில், 397 பேருக்கு கட்டட வரைப்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கட்டி முடிக்கப்பட்ட கட்டடத்துக்கு வரிவிதிப்பு செய்வதில் தாமதம் ஏற்படுவதாக புகார் எழுந்து வந்தது. இப் புகாரால், சென்ற மாதம் முதல் புதிதாக கட்டடம் கட்டியதும், கட்டட உரிமையாளர்கள் மைய அலுவலகத்தில் விண்ணப்பத்தை சமர்ப்பித்த உடன், வரிவிதிப்பு ஆணையை பெற வசதி செய்யப்பட்டுள்ளது.

மாநகர மக்களுக்கு மாநகராட்சியின் அனைத்து சேவைகளும் உரிய நேரத்தில் சென்றடைய வேண்டும் என்பதில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றார் சுப்பிரமணியன்.