Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சி அலுவலகத்தில் காலை நேரத்தில் அனுமதி மறுப்பு கமிஷனர் உத்தரவுக்கு கண்டனம்

Print PDF

தினகரன்                        04.11.2010

மாநகராட்சி அலுவலகத்தில் காலை நேரத்தில் அனுமதி மறுப்பு கமிஷனர் உத்தரவுக்கு கண்டனம்

பெங்களூர், நவ. 4: பெங்களூர் மாநகராட்சியின் தலைமையகத்தில் அதிகாரிகளையும், கவுன்சிலர்களையும் பார்த்து தங்களது குறைகளை தெரிவிக்க பொதுமக்கள் தினமும் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் மாநகராட்சி கமிஷனர் சித்தய்யா கடந்த மாதம் 28ம்தேதி உத்தரவு வெளியிட்டுள்ளார். அதில் காலை 10.30 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை அதிகாரிகளை தவிர பொதுமக்கள், பத்திரிகையாளர்கள் உள்பட யாரும் மாநகராட்சி அலுவலகத்திற்குள் வரக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

மாநகராட்சி எதிர்க்கட்சிகளான காங்கிரசும், மஜதவும் இந்த உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மஜத தலைவர் பத்மநாபா நேற்று கூறுகையில் "போகிற போக்கை பார்த்தால் வேலியை அமைத்துக்கொண்டு அதற்குள் அமர்ந்து மாநகராட்சி தனது வேலையை பார்க்கும் போல உள்ளது. எதிர்க்கட்சித் தலைவர்களை தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து பார்த்து தங்களது குறைகளை தெரிவித்துச் செல்கின்றனர்.

பத்திரிக்கையாளர்களையும் மாநகராட்சி வளாகத்திற்குள் வரக்கூடாது என்றால் மாநகராட்சியின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்படுகிறது. மாநகராட்சியின் வரலாற்றிலேயே இப்படி ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதில்லை. இந்த உத்தரவை கமிஷனர் வாபஸ் பெறவேண்டும் என்றார்.

இதுகுறித்து சித்தய்யா நேற்று கூறியதாவது: காலை முதல் மக்களை சந்தித்துக் கொண்டிருந்தால் மாநகராட்சி பணிகளை பார்க்க முடியாமல¢ அதிகாரிகள் சிரமப்படுகின்றனர். எனவேதான் பிற்பகல் 3 மணி முதல் மாலைவரை மட்டும் பொதுமக்கள் மாநகராட்சி அலுவலகத்திற்கு வர வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருந்தேன்.

கவுன்சிலர்கள் பலரும் இக்கோரிக்கையை என்னிடம் வைத்திருந்தனர். அதையேற்றுதான் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் பத்திரிக்கையாளர்களை அலுவலகத்திற்குள் விடாமல் தடுக்க நான் உத்தரவு பிறப்பிக்கவில்லை. அவர்கள் எப்போதும் போல வந்து செல்லலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.