Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

லால்பாக் பூங்காவில் பிளாஸ்டிக் பொருள் பயன்படுத்த தடை மாநகராட்சி நடவடிக்கை

Print PDF

தினகரன்               15.11.2010

லால்பாக் பூங்காவில் பிளாஸ்டிக் பொருள் பயன்படுத்த தடை மாநகராட்சி நடவடிக்கை

பெங்களூர், நவ. 15:பெங்களூர் புகழ் பெற்ற லால்பாக் பூங்காவில் பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகிறது.

பெங்களூர் மாநகர மக்களின் பொழுது போக்கு அம்சமாகவும், கண்கவர் சுற்றுலா தலமாகவும் லால்பாக் பூங்கா உள்ளது. இதில் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் ஆயிரகணக்கானோர் வாக்கிங் செல்கிறார்கள். காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். பூங்காவை பார்க்க வரும் பொதுமக்கள் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு செல்வதால், பூங்காவின் மாசு நிரம்பி பாதிப்பை ஏற்படுத்துகிறது. குளிர்பான பாட்டீல், பிஸ்கட், சிப்ஸ் உள்பட பிளாஸ்டிக்கில் கொண்டு செல்லும் பொருட்களை எடுத்து செல்ல வேண்டாம் என்று பலமுறை எச்சரித்தும் மக்கள் காதில் வாங்கி கொள்ளாமல் உள்ளனர்.

இதற்கு நிரந்தர தீர்வு காண மாநகராட்சி முடிவு செய்துள்ளது. பூங்காவின் அனைத்து நுழைவு வாயில்கள் மற்றும் பூங்கா உள்பகுதியில் முக்கிய இடங்களில் தயவு செய்து பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு செல்லாதீர்கள், பூங்கா சுத்தத்தை காப்பாற்றுங்கள்என்ற வாசகம் கொண்ட பெயர் பலகை வைக்க முடிவு செய்துள்ளனர். இரண்டொரு நாளில் பெயர் பலகை வைக்கப்படுகிறது. மேலும் பூங்காவை காணவருவோரை நுழைவு வாயிலில் காவலர்கள் சோதனை நடத்தி பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு சென்றால், வாங்கி வைத்து திரும்பி செல்லும் போது கொடுத்தனுப்பும் திட்டம் செயல்படுத்தவும் முடிவு செய்துள்ளனர்.

காவலர்களை ஏமாற்றி பூங்காவுக்குள் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவோரை தடுத்து வெளியேற்றவும், அவர்களிடம் அபராதம் வசூலிக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.