Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கடலோர பகுதிகளில் சட்டவிரோத கட்டிடங்கள்

Print PDF

தினகரன்              20.11.2010

கடலோர பகுதிகளில் சட்டவிரோத கட்டிடங்கள்

மும்பை, நவ. 20: தென்மும்பை கடலோரப் பகுதிகளில் உள்ள சட்டவிரோத கட்டிடங்கள் குறித்தும் அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் 4 வாரத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மும்பை மாநகராட்சி மற்றும் மகாராஷ்டிரா மாநில வருவாய்துறை அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தென்மும்பை கடலோரப் பகுதிகளான கொலாபா, கபே பரேட், பேக்பே மற்றும் மெரைன் லைன் ஆகியன கடலோர ஒழுங்குமுறை பிராந்தியங்களாகும். இந்த பகுதிகளில் கட்டுமான பணிகள் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் கடலோர ஒழுங்குமுறை பிராந்தியம் விதியை மீறி, சட்டவிரோதமாக பல கட்டிடங்கள் இப்பகுதிகளில் கட்டப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்றுதான் சர்ச்சைக்குரிய ஆதர்ஷ் சொசைட்டி ஆகும். இந்நிலையில் கடலோரப் பகுதிகள் ஆக்கிரமிப்பு மற்றும் சட்டவிரோத கட்டிடங்கள் குறித்து மும்பை உயர் நீதிமன்றத்தில், ரெசிடென்ட்ஸ் அசோசியேசன் என்ற அமைப்பு பொதுநல வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில், 2003ம் ஆண்டுக்கு பிறகு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நீதிமன்றத்தில் அறிக்கை எதுவும் தாக்கல் செய்யவில்லை.

முன்னதாக கடந்த 2000ம் ஆண்டில் வி. இந்துல்கர் என்பவரை நீதிமன்ற கமிஷனராக நியமித்த உயர் நீதிமன்றம், கடலோரப் பகுதிகளை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய பணித்தது. 2001, ஜனவரி 31ம் தேதி இந்துல்கர் தனது அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில் கடலோர ஒழுங்குமுறை பிராந்தியம் விதியை மீறி சட்டவிரோதமாக பல கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது என்றும் அவற்றை இடிக்க வேண்டும் என்றும் இந்துல்கர் பரிந்துரைத்திருந்தார். பரிந்துரையை ஏற்று, சட்டவிரோத கட்டிடங்களை இடிக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் சம்மந்தப்பட்ட அரசு அதிகாரிகள், நீதிமன்ற உத்தரவை இன்றளவும் நிறைவேற்றவில்லை.

இந்நிலையில் இந்த வழக்கு, தலைமை நீதிபதி மொஹித் ஷா மற்றும் நீதிபதி எஸ். காதாவாலா ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த பெஞ்ச், தென்மும்பை கடலோரப் பகுதிகளில் உள்ள சட்டவிரோத கட்டிடங்கள் குறித்தும் அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் மாநகராட்சி கமிஷனர், மும்பை கலெக்டர், துணை கலெக்டர்(ஆக்கிரமிப்பு) ஆகியோர் டிசம்பர் 23ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை 2011, ஜனவரி மாதத்துக்கு ஒத்தி வைத்தது.