Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கடந்த 2 ஆண்டுகளில் அனுமதியற்ற கட்டிடம் தொடர்பான 5,000 புகார்கள் மீது நடவடிக்கை

Print PDF

தினகரன்                 20.11.2010

கடந்த 2 ஆண்டுகளில் அனுமதியற்ற கட்டிடம் தொடர்பான 5,000 புகார்கள் மீது நடவடிக்கை

புதுடெல்லி, நவ. 20: அனுமதியற்ற கட்டிடங்கள் தொடர்பாக வந்த 10,000 புகார்களில் 5,000 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி கமிஷனர் கூறினார்.

லட்சுமி நகரில் கட்டிடம் இடிந்து 70 பேர் பலியானார்கள். அனுமதியற்ற கட்டிடங்கள் மீது மாநகராட்சி நடவடிக்கை எடுக்காத காரணத்தால் இந்த சம்பவம் நடந்ததாக காங்கிரஸ் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது. மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் ஜே.கே.சர்மா(காங்.) கூறுகையில், "மாநகராட்சி அதிகாரிகள் லஞ்சம் வாங்கிக் கொண்டு அனுமதியற்ற கட்டிடங்களை கண்டுகொள்ளாமல் விடுகின்றனர். கட்டிடத்தின் உயரத்தைப் பொறுத்து லஞ்சம் வாங்கியிருக்கின்றனர். அதற்காக ஓட்டல் மெனு போல லஞ்சம் வாங்குவதற்காக ஒரு பட்டியலையே அவர்கள் தயார் செய்து வைத்திருக்கின்றனர்" என்று குற்றம் சுமத்தினார்.

அந்தக் குற்றச்சாட்டை மறுக்கும் விதமாக மாநகராட்சி கமிஷனர் கே.எஸ்.மெஹ்ரா கூறுகையில், "2008ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்து அனுமதியற்ற கட்டிடங்கள் தொடர்பாக 9,568 புகார்கள் மாநகராட்சிக்கு வந்துள்ளன. அதில், 5,000 புகார்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதே காலக்கட்டம் வரையில் 10,000 கட்டிடங்கள் அனுமதியின்றி கட்டப்பட்டுக் கொண்டிருந்தபோதே கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்துள்ளோம்" என்றார்.

கிழக்கு டெல்லியின் பிரம்மபுரி பகுதியில், கடந்த ஜூலை மாதம் ஒரு கட்டிடம் இடிந்து விழுந்து 8 பேர் பலியானதைத் தொடர்ந்து, பாதுகாப்பற்ற கட்டிடங்களை கண்டறிவதற்காக இன்ஜினியர் குழு அமைக்கப்படும் என்று மாநகராட்சி அறிவித்தது பற்றி நிருபர்கள் கேட்டதற்கு, "இன்னமும் குழு அமைக்கப்படவில்லை. காரணம் அதற்கு தகுதியான இன்ஜினியர்கள் மாநகராட்சியில் இல்லை. அதற்காக ஒரு பட்டியல் தயாரிக்கப்பட்டு, அதிலிருந்து சிலர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். விரைவில் இன்ஜினியர் குழு அமைக்கப்படும். அதற்கான பணிகள் நடந்து வருகின்றன" என்றார்.

"மாநகராட்சியின் கட்டிடத் துறையில் லஞ்ச அதிகாரிகளால்தான் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறதே?" என்ற கேள்விக்கு, "லஞ்சம் தொடர்பான புகார்கள் வந்தால் இலாகாபூர்வ விசாரணை அல்லது இதர அவசியமான நடவடிக்கைகளை மாநகராட்சி தொடங்கிவிடும். கட்டிட துறை போன்ற முக்கியமான துறைகளில் லஞ்ச அதிகாரிகள் நியமிக்கப்படுவதில்லை. தவறுதலாக ஓரிருவர் நியமிக்கப்பட்டிருக்கலாம். அதற்காக கட்டிட துறை அதிகாரிகள் லஞ்சத்தில் திளைப்பதாக கூறக்கூடாது" என்றார்.

"கட்டிடம் இடிந்து 3 நாட்களாகியும் எந்த அதிகாரி மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையே" என்ற கேள்விக்கு, "இடைக்கால விசாரணை அறிக்கை வந்ததும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

மெஹ்ரா மேலும் கூறுகையில், "லட்சுமி நகரில் 38 கட்டிடங்களைச் சுற்றி தண்ணீர் தேங்கியிருப்பதால் அவை பாதுகாப்பற்ற கட்டிடங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளன.

அந்த கட்டிடங்களை பலப்படுத்த முடியுமா என்று ஆராய்வோம். முடியாவிட்டால் இடித்து விடுவோம். ஆற்றுப்படுகையைச் சுற்றி 300 மீட்டர் தூரத்துக்கு டெல்லி மாநகராட்சிக்கு உட்பட்ட இடத்தில் தண்ணீர் தேங்கிய அல்லது தண்ணீர் கசிவு உள்ள கட்டிடங்கள் குறித்து ஆய்வு நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" என்றார்.

"டெல்லியில் பெருகும் அனுமதியற்ற கட்டிடங்கள் தொடர்பாக தலைமை தகவல் ஆணையர் கடிதம் அனுப்பியதாக கூறியுள்ளாரே?" என்று ஒரு கேட்டதற்கு, "அவர் அனுப்பிய அனுமதியற்ற கட்டிடங்களின் பட்டியலின் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன" என்றார்.