Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சேலம் மாநகராட்சியில் வரிபாக்கி வைத்திருப்போரின் குடிநீர் இணைப்பு துண்டிப்பு

Print PDF

தினகரன்                      24.11.2010

சேலம் மாநகராட்சியில் வரிபாக்கி வைத்திருப்போரின் குடிநீர் இணைப்பு துண்டிப்பு

சேலம், நவ.24: சேலம் சூரமங்கலம் பகுதியில் குழாய் வரி கட்டாத 10 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது. எனவே, பொதுமக்கள் தாமாகவே முன்வந்து நிலுவை வரிகளை செலுத்த வேண்டும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

சேலம் மாநகராட்சியில் வரி வசூல் பணி தொடர்பாக ஆய்வு கூட்டம் 2 தினங்களுக்கு முன் நடந்தது. கூட்டத்திற்கு ஆணையர் பழனிசாமி தலைமை வகித்து, சேலம் மாநகராட்சிக்கு பொதுமக்களால் செலுத்தப்படவேண்டிய சொத்துவரி, குடிநீர் கட்டணம், தொழில்வரி, கடை வாடகை மற்றும் இதர வரிகளை நிலுவையின்றி வசூலிக்க வேண்டும் என வரிவசூல் ஊழியர்களுக்கு உத்தரவிட்டார்.

இதன் பேரில் நேற்று முன்தினம் சூரமங்கலம் மண்டலத்தில் வீட்டு வரி, குழாய் வரி கட்டாத வீடுகள் கண்டறியப்பட்டது. இதில் 19வது வார்டில் 5 வீடுகளில் குடிநீர் கட்டணம் செலுத்தாது கண்டறியப்பட்டு உடனடியாக மாநகராட்சி ஊழியர்களால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

இதேபோல் நேற்று சூரமங்கலம் தர்மன் நகர் 1, 2, 3 ஆகிய தெருக்களிலும் 5 வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மற்ற மண்டலங்களிலும் நீண்டநாட்களாக வரி செலுத்தாதவர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகிறது. சேலம் மாநகராட்சியில் வீடு, கடைகளுக்கான வரிகளை செலுத்த 4 கணினி வாகனங்கள் அந்தந்த வார்டுகளுக்கே செல்கிறது. 8 வரிவசூல் மையங்களும் செயல்படுகின்றன. மாநகராட்சியின் பாதாள சாக்கடை, தனி குடிநீர் திட்டம் உள்ளிட்ட பணிகள் நிறைவேற வரி செலுத்தாதவர்கள் உடனடியாக நிலுவை வரிகளை செலுத்தி மாநகராட்சிக்கு ஒத்துழைக்க வேண்டும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.