Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

விதிமீறல் கட்டடங்கள் பட்டியல் ஐகோர்ட் உத்தரவு

Print PDF

தினமலர்                24.11.2010

விதிமீறல் கட்டடங்கள் பட்டியல் ஐகோர்ட் உத்தரவு

சென்னை : சென்னையில் அனுமதியின்றி, விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டடங்களின் பட்டியல், அந்தக் கால கட்டத்தில் பணியாற்றிய அதிகாரிகளின் விவரங்களை தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.சென்னை சூளைப் பகுதியை சேர்ந்த சாலமன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், "சூளையில் வாத்தியார் கந்தப்பிள்ளை தெருவில் ஒரு அடுக்குமாடி கட்டடம் கட்டப்பட்டுள்ளது. தரைத்தளம் மற்றும் முதல் அடுக்குக்கு தான் அனுமதி பெற்றுள்ளனர். ஆனால், ஏழு அடுக்கு கட்டியுள்ளனர். இதனால் எங்களுக்கு குடிநீர், கழிவுநீர் பிரச்னை ஏற்படுகிறது.இதுகுறித்து அதிகாரிகளுக்கு மனு அனுப்பினேன்.

எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டுமானங்களை அகற்ற உத்தரவிட வேண்டும்' என கூறியுள்ளார்.இம்மனுவை விசாரித்த தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் அடங்கிய "முதல் பெஞ்ச்', சென்னையில் அனுமதியின்றி, விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டடங்களின் பட்டியல், அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றிய விவரங்களை மாநகராட்சி தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.இந்த வழக்கு மீண்டும் "முதல் பெஞ்ச்' முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அட்வகேட் ஜெனரல் தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து, "முதல் பெஞ்ச்' பிறப்பித்த இடைக்கால உத்தரவு:அட்வகேட் ஜெனரல் கேட்டு கொண்டதன் பேரில், விசாரணை 30ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது. மாநகராட்சி வரம்புக்குள் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டடங்களின் விவரங்களை தாக்கல் செய்ய ஏதுவாக, விசாரணை தள்ளி வைக்கப்படுகிறது.எந்த அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் இந்த கட்டுமானங்கள் நடந்தது? அந்த கால கட்டத்தில் அவ்வப்போது பதவி வகித்த மண்டல அதிகாரிகளின் விவரங்களையும் தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு "முதல் பெஞ்ச்' இடைக்கால உத்தரவிட்டுள்ளது.