Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வெங்காய மார்க்கெட்டையும் மாற்றவேண்டும்

Print PDF

தினமணி             24.11.2010

வெங்காய  மார்க்கெட்டையும் மாற்றவேண்டும்

மதுரை, நவ.23: மதுரை கீழமாரட் வீதியில் செயல்பட்டுவரும் வெங்காய மார்க்கெட்டையும் நகருக்கு வெளியே மாற்ற வேண்டும் என, மாநகராட்சிக் கூட்டத்தில் காங்கிரஸ் கவுன்சிலர் ஐ. சிலுவை வலியுறுத்தினார்.

திங்கள்கிழமை நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:

மழைக் காலத்தில் மாநகராட்சி எல்லைக்கு உள்பட்ட சாலைகள் மோசமாக சேதமடைந்துள்ளன. இதுதொடர்பான "பேட்ஜ் வொர்க்'கை மாநகராட்சி விரைவில் மேற்கொள்ள வேண்டும். நகரில் கொசுத் தொல்லை அதிகரித்து வருகிறது. தற்போது மழைக் காலமாகவும் உள்ளது. எனவே, கொசுவை ஒழிக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், சென்ட்ரல் மார்க்கெட் மாட்டுத்தாவணி பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டதால் நகரில் போக்குவரத்து ஓரளவு சீராக உள்ளது. அதேபோல் கீழமாரட் வீதியில் நெரிசலை ஏற்படுத்தும் வெங்காய மார்க்கெட்டையும் நகரின் வெளிப்பகுதிக்குக் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

விரைவில் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என, மேயர் கோ. தேன்மொழி, கமிஷனர் செபாஸ்டின், துணைமேயர் மன்னன் ஆகியோர் தெரிவித்தனர்.

கவுன்சிலர் சிலுவை மேலும் பேசுகையில், மாநகராட்சி விரிவாக்கத்துக்கான ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்பின் மாநகராட்சியில் எத்தனை வார்டுகள், மண்டலங்கள் ஏற்படுத்தத் திட்டம் உள்ளது எனக் கேட்டார்.

கமிஷனர் பதில் அளிக்கையில், இதுதொடர்பாக தனி அதிகாரி ஒருவர் நியமிக்கப்படுவார். மக்கள் தொகைக்கு ஏற்ப எத்தனை வார்டுகள், மண்டலங்கள் என சர்வே எடுக்கப்பட்ட பின்னர்தான், இதுகுறித்து தெளிவாகத் தெரிவிக்க முடியும் என்றார்.

மண்டலத் தலைவர் இசக்கிமுத்து: நகருக்குள் அதிகளவு பன்றிகள் திரிகின்றன. இவற்றை ஒழிக்க அதன் உரிமையாளர்களை அழைத்து எச்சரிக்கை செய்து பன்றிகளை வெளியேற்ற வேண்டும் என்றார்.

மண்டலத் தலைவர் குருசாமி: கிழக்கு மண்டலப் பகுதியில் 8 மாநகராட்சி பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் போதிய ஊழியர்கள் இல்லை. பாதுகாவலர் இல்லை. இதனால் இரவு நேரத்தில் பள்ளிக்கூடங்களில் சமூக விரோதச் செயல்கள் நடைபெறுகின்றன. இப்பகுதியில் உள்ள நூலகத்தில் நூலகர் நியமிக்கப்படவேண்டும்.

கீரைத்துறை, காமராஜர்புரம் போன்ற பகுதிகளில் பன்றிகள் தொல்லை உள்ளன. இவற்றைப் பிடித்து காட்டுப் பகுதியில்விட மாநகராட்சி நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தினார்.

Last Updated on Wednesday, 24 November 2010 11:31