Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பாதாள சாக்கடை விவகாரம் நகராட்சி நிர்வாக செயலாளர் 6ம் தேதி ஆஜராக வேண்டும் உயர் நீதிமன்றம் உத்தரவு

Print PDF

தினகரன்              25.11.2010

பாதாள சாக்கடை விவகாரம் நகராட்சி நிர்வாக செயலாளர் 6ம் தேதி ஆஜராக வேண்டும் உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை, நவ.25: பாதாள சாக்கடைக்குள் மனிதர்கள் இறங்கி சுத்தம் செய்யும் விவகாரம் தொடர்பாக, வரும் 6ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று நகராட்சி நிர்வாக துறை செயலாளருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விருகம்பாக்கத்தை சேர்ந்த ஏ.நாராயணன், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் கூறியிருப்பதாவது:

தமிழகம் முழுவதும் பாதாள சாக்கடை உள்ளது. இதில் சேரும் கழிவுகளை அள்ளவும், அடைப்பை நீக்கவும் மனிதர்கள் இறங்கக் கூடாது என்று 2008ம் ஆண்டில் உயர் நீதிமன்றம் தடை விதித்தது.

மேலும், பாதாள சாக்கடையில் இறங்கும் மனிதர்களுக்கு, கவசம் உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் என்றும் அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால், இந்த உத்தரவை உள்ளாட்சி துறை பின்பற்றவில்லை. சென்னை குடிநீர் வினியோகம் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியமும் பின்பற்றுவது இல்லை.

நீதிமன்ற உத்தரவை மீறி சென்னை, திருச்சி, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல இடங்களில் பாதாள சாக்கடைக்குள் மனிதர்கள் இறங்கி சுத்தம் செய்கின்றனர். அவ்வாறு இறங்கியவர்களில் இந்த ஆண்டு இதுவரை 15 பேர் உயிர் இழந்துள்ளனர். எனவே, நீதிமன்ற உத்தரவை மீறிய அதிகாரிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும். இதுகுறித்து ஆராய ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அல்லது ஓய்வுபெற்ற தலைமைச் செயலாளர் தலைமையில் கமிட்டி அமைக்க வேண்டும்.

இவ்வாறு வழக்கில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கை நேற்று விசாரித்த தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர், "தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர், சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரிய தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர், டிசம்பர் 6ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும்" என்று நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

Last Updated on Thursday, 25 November 2010 05:35