Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குன்னூர் நகராட்சி அதிகாரிகள் திடீர் ஆய்வு

Print PDF

தினமலர்              26.11.2010

குன்னூர் நகராட்சி அதிகாரிகள் திடீர் ஆய்வு

குன்னூர்: குன்னூரில் உள்ள கடைகளில், நகராட்சி அதிகாரிகள் நடத்திய திடீர் ஆய்வில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்குகள் பறிமுதல் செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட கடைக்காரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது; இறைச்சிக் கடைக்காரர்கள், சுகாதாரத்தை காக்க வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டது. குன்னூர் நகராட்சி கமிஷனர் சேகரன் உத்தரவின் படி, சுகாதார மேற்பார்வையாளர் செந்தில்குமார், ஞானசேகரன், ஆய்வாளர் பூமாலை, நகரமைப்பு அலுவலர் சுகுமார், பெரியசாமி மற்றும் ஊழியர்கள் குன்னூர் மார்க்கெட், மவுண்ட்ரோடு, பஸ் ஸ்டாண்டு, பெட்போர்டு உட்பட இடங்களில் உள்ள கடைகளில், இரு நாட்களாக ரெய்டு நடத்தினர். பிளாஸ்டிக் கேரி பேக், டம்ளர், தட்டு உட்பட பொருட்களை மொத்தமாக விற்பனை செய்யும் 9 கடைகளில் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். நான்கு கடைகளில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்குகள் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, 4 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன; 5,550 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

பிளாஸ்டிக் கேரி பேக் தயாரிப்பு கம்பெனிகளிடம் வாங்கும் பிளாஸ்டிக் பைகளின் மீது, அந்த பிளாஸ்டிக் கேரி பேக்குகள் எத்தனை மைக்ரான் உள்ளது என்பது அச்சிடப்பட்டிருக்கும். ஆனால், பல கடைகளில், கடைக்காரர்களே பிளாஸ்டிக் பைகள் அடங்கிய கவரின் மீது ஸ்கெட்ச் பேனா, பென்சில், ரப்பர் ஸ்டாம்பு மூலம் மைக்ரானின் அளவை அச்சிடுகின்றனர்; இது, தவறான செயல் என அதிகாரிகள் சுட்டிக் காட்டினர். குன்னூர் மார்க்கெட்டில் உள்ள மீன் இறைச்சி வியாபாரிகள், திறந்த வெளியில் மீன்களை வைத்து விற்பதால், , கொசு போன்றவை மொய்க்கின்றன; இதைத் தவிர்க்க, மீன் இறைச்சிகளின் மீது வலையை விரித்து வைத்து விற்க வேண்டும்; தவிர, மீன், கோழி இறைச்சிக் கழிவுகளை அருகேயுள்ள ஆற்றில் கொட்டுவதால், துர்நாற்றம் வீசுகிறது; எனவே, கழிவுகளை ஒதுக்குப்புறமான இடத்தில் கொட்ட வேண்டும் என அறிவுறுத்தினர்.

பல கடைகளில், பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்டு வரும் ஊறுகாய்களை, சிறிய பிளாஸ்டிக் கவர்களில் 50 கிராம், 100 கிராம் என அடைத்து விற்கப்படுகின்றன; இவற்றையும் ஆய்வு செய்த அதிகாரிகள், பிளாஸ்டிக் கவர்களில் ஊறுகாய்களை அடைத்து விற்கக் கூடாது எனவும் அறிவுறுத்தினர்.