Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

அனுமதியற்ற கட்டிடங்கள் விவகாரம் லஞ்ச அதிகாரிகள் 530 பேர் மீது இலாகாபூர்வமாக நடவடிக்கை

Print PDF

தினகரன்            29.11.2010

அனுமதியற்ற கட்டிடங்கள் விவகாரம் லஞ்ச அதிகாரிகள் 530 பேர் மீது இலாகாபூர்வமாக நடவடிக்கை

புதுடெல்லி, நவ. 29: அனுமதியற்ற கட்டிட விவகாரம் தொடர்பாக தவறிழைத்த மாநகராட்சி அதிகாரிகள் 530 பேர் மீது கடந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிழக்கு டெல்லியின் லலிதா பார்க் பகுதியில் 5 மாடி கட்டிடம் கடந்த 15ம் தேதி இடிந்து விழுந்து 70 பேர் பலியாயினர். இதில், 2 மாடிகள் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ளது தெரிய வந்தது. அனுமதியற்ற கட்டிடங்களை கண்டுபிடித்து தடுக்கத் தவறிய மாநகராட்சிதான் 70 பேர் பலியாகக் காரணம் என்று மாநில அரசு குற்றம்சாட்டியது.

மாநகராட்சியின் எதிர்க்கட்சித் தலைவர் (காங்கிரஸ்) ஜெ.கே.சர்மா, "ஓட்டல் மெனு கார்டு போல கட்டிடத்தின் உயரத்திற்கேற்ப மாநகராட்சி அதிகாரிகள் லஞ்சம் வாங்கிக் கொண்டு, அனுமதியற்ற கட்டிடங்களை கட்ட அனுமதித்தார்கள்" என்று குற்றம் சாட்டினார். பா..வின் ஜெக்தீஷ் மேம்கெய்ன் என்ற கவுன்சிலர், "மாநகராட்சியின் கட்டிடத் துறையில் லஞ்சம் கரைபுரண்டு ஓடுவது பற்றி நானும் நீண்ட காலமாக பிரச்னை எழுப்பி வருகிறேன். எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை" என்றார்.

ஆனால் மாநகராட்சி ஆணையர் மெஹ்ரா கூறும்போது, "கட்டிடங்கள் துறையில் லஞ்சம் இருப்பதாக பொத்தாம் பொதுவாக கூறுவது நியாயமல்ல. அனுமதியற்ற கட்டிடங்கள் தொடர்பாக யார் மீது புகார் வந்தாலும் அதுபற்றி விசாரிக்கப்பட்டு இலாகாபூர்வ நடவடிக்கையோ அல்லது இதர அவசியமான நடவடிக்கையோ எடுக்கப்பட்டுள்ளது" என்று விளக்கம் அளித்தார்.

அந்த வகையில், லஞ்சம் வாங்கிக் கொண்டு, அனுமதியற்ற கட்டிடங்களை கட்டுவதற்கு ஊக்கம் அளித்த மாநகராட்சி அதிகாரிகள் பற்றிய புள்ளி விவரம் இப்போது தெரிய வந்துள்ளது. அது வருமாறு:

2007ம் ஆண்டு முதல் 2010 நவம்பர் 15ம்தேதி வரையில் அனுமதியற்ற கட்டிடங்கள் தொடர்பாக 8,030 புகார்கள்.

புகாரின் முக்கியத்துவத்தைக் கருதி, 8,030ல் 357 புகார்கள் மாநகராட்சியின் விஜிலன்ஸ் துறைக்கு அனுப்பப்பட்டது. இதில், 170 புகார்கள் மீதான விசாரணையை விஜிலன்ஸ் முடித்து விட்டது. லஞ்சம் பெற்றுக் கொண்டு அனுமதியற்ற கட்டிடங்களை கட்டுபவர்களுக்கு ஆதரவாக இருந்ததாக கடந்த 4 ஆண்டுகளில் மாநகராட்சி அதிகாரிகள் 533 பேர் மீது இலாகாபூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒரு அதிகாரி டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார்.

சிவில் லைன்ஸ் மண்டலத்தில் மட்டும் 78 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக தெற்கு மண்டலத்தில் 66 பேர் மீதும், ஷாதரா தெற்கு மண்டலத்தில் 65 பேர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 70 பேர் பலியான கட்டிடம், ஷாதரா தெற்கு மண்டலத்தின்கீழ்தான் வருகிறது என்பது குறிப்பிடத் தக்கது.