Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நகரில் ரோட்டோரம் குப்பை கொட்டக்கூடாது மீறினால் கடும் நடவடிக்கை

Print PDF

தினமலர்                29.11.2010

நகரில் ரோட்டோரம் குப்பை கொட்டக்கூடாது மீறினால் கடும் நடவடிக்கை

புதுக்கோட்டை: "புதுக்கோட்டை நகரில் குப்பைகளை ரோட்டோரமாக கொட்டி வைப்பதை தவிர்க்கவேண்டும். மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,' என உணவகங்கள் மற்றும் வணிகவளாக உரிமையாளர்களுக்கு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. புதுக்கோட்டை நகராட்சியில் போதிய துப்புரவுப் பணியாளர்கள் இல்லாததால் துப்புரவுப் பணிகள் முடங்கியுள்ளது. இதன்காரணமாக நகரின் அனைத்து பகுதிகளிலும் குப்பைகள் மற்றும் கழிவுகள் மலைபோல் குவிந்து சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. இதற்கிடையே நகரில் பெய்துவரும் பலத்த மழையினால் கழிவுப் பொருட்கள் மழை தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு வரத்துவாரிகள் மற்றும் கழிவுநீர் ஓடைகளில் அடைப்பை ஏற்படுத்தியுள்ளது. மழை தண்ணீர் வடிந்து செல்ல வழியின்றி நகரின் முக்கிய வீதிகள் மற்றும் ரோடுகளில் நாள்கணக்கில் தேங்கியுள்ளது.

இதுபோன்று கணேஷ்நகர், போஸ்நகர், காமராஜபுரம், பூங்காநகர், ராஜகோபாலபுரம் உள்ளிட்ட நகரின் முக்கிய குடியிருப்பு பகுதிகளையும் மழை தண்ணீர் சூழ்ந்துள்ளது. மழைத்தொடர்ந்து பெய்துவரும் நிலையில் நகரில் வெள்ள அபாயத்தை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் துவக்கியுள்ளது. முதற்கட்டமாக ஹோட்டல்கள், விடுதிகள், வணிக வளாகங்கள் மற்றும் வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை வீதிகளிலும், ரோட்டோரங்களிலும் கொட்டுவதை தவிர்த்து அவற்றை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து துப்புரவுப் பணியாளர்களிடம் ஒப்படைக்கவேண்டும் என அறிவுரை வழங்கியுள்ளது. இதையும் மீறி பொது இடங்களில் குப்பைகள் கொட்டுவது தெரியவந்தால் நகராட்சி நிர்வாகத்தின் மூலம் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.

புதுக்கோட்டை நகராட்சியை பொறுத்தமட்டில் "தூய்மைப் புதுகை' திட்டம் செயல்பாட்டில் இருந்தபோது நகரில் துப்புரவுப் பணிகள் தங்குதடையின்றி முறையாக நடந்தது. துப்புரவுப் பணியாளர்கள் வீடுகள் மற்றும் கடைகள்தோறும் சென்று குப்பைகளை சேகரித்து வந்தனர். தற்போது இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் துப்புரவுப் பணிகளும் முடங்கியுள்ளது. வீடுகள் மற்றும் கடைகள்தோறும் சென்று குப்பைகள் சேகரிப்பதை துப்புரவுப் பணியாளர்கள் தவிர்த்துவருகின்றனர். இதுவே நகரில் திரும்பும் இடமெல்லாம் குப்பைகள் மலைபோல் குவிய காரணமாக அமைந்துள்ளது. எனவே, புதுக்கோட்டையில், "தூய்மை புதுகை' திட்டத்தை மீண்டும் செயல்படுத்த நகராட்சி நிர்வாகம் முன்வரவேண்டும். துப்புரவுப் பணியாளர் காலிப் பணியிடங்களை நிரப்புவதோடு, மக்கள் தொகைக்கேற்றவாறு கூடுதல் துப்புரவுப் பணியாளர்களை பணியமர்த்தவும் நகராட்சி நிர்வாகம் முன்வரவேண்டும் என நகர்ப்பகுதி மக்கள் விரும்புகின்றனர்.