Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தெரு விளக்குகளைப் பராமரிக்கும் பொறுப்பு 2 மாதத்தில் தனியாரிடம் ஒப்படைக்கப்படும்: நகர்மன்றத் தலைவர்

Print PDF

தினமணி 28.08.2009

தெரு விளக்குகளைப் பராமரிக்கும் பொறுப்பு 2 மாதத்தில் தனியாரிடம் ஒப்படைக்கப்படும்: நகர்மன்றத் தலைவர்

ராமநாதபுரம், ஆக. 27: தெரு விளக்குகள் பராமரிக்கும் பொறுப்பு 2 மாத காலத்தில் தனியாரிடம் ஒப்படைக்கப்படும் என ராமநாதபுரம் நகர்மன்றத் தலைவர் ஆர்.லலிதகலா ரெத்தினம் தெரிவித்தார்.

ராமநாதபுரம் நகர்மன்ற அவசரக் கூட்டம் தலைவர் ஆர்.லலிதகலா ரெத்தினம் தலைமையில் வியாழக்கிழமை நடந்தது. ஆணையர் கே.வி.பாலகிருஷ்ணன், பொறியாளர் எம்.கருப்புச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் உறுப்பினர்கள் பேசியது:

கவிதா: தெரு விளக்குகள் பராமரிப்பை தனியாரிடம் ஒப்படைக்கும் வரையாவது 33 வார்டுகளிலும் முறையாக பராமரிக்கச் சொல்ல வேண்டும்.

பலராமன்: சுடுகாட்டில் சடலங்களை எரிக்க கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் ஏழைகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.

காமராஜ்: நகருக்குள் சைக்கிளில் கூட போக முடியாத அளவுக்கு சாலைகள் மிக மோசமாக இருக்கின்றன. பணம் கட்டியும் குடிநீர் இணைப்புக்கு பலர் அலைந்து வருகின்றனர்.

ராஜாஉசேன்: நகர்மன்ற உறுப்பினர்கள் செல்வி, எம்.ஞானசௌந்தரி ஆகிய இருவரையும் வெள்ளைப் பேப்பரில் கையெழுத்து வாங்கிக் கொண்டு பதவி நீக்கம் செய்து ஏமாற்றியது தவறு. பாதிக்கப்பட்டவர்கள் எங்களை யாரும் பதவி நீக்கம் செய்யவில்லை. நாங்களும் எழுதிக் கொடுக்கவில்லை என்கின்றனர்.

இதே பிரச்னையை மையப்படுத்தி உறுப்பினர்கள் நிஜாம்அலிகான், சுப. நாகராஜ் உள்பட பலரும் பேசினர்.

நாகஜோதி: எனது வார்டில் ஒரு வாரமாக குடிநீர் வரவில்லை. இதே நிலை நீடித்தால் திமுக ஆட்சிக்குத்தான் கெட்ட பெயர் வரும்.

ஐனூல் பரிதா: பன்றிகள் தொல்லை அதிகமாக உள்ளதால் அதை ஒழிக்க வேண்டும்.
உறுப்பினர்களின் கேள்விகளுக்கு தலைவர் பதில் அளித்துப் பேசியது: தெருவிளக்குகள் பராமரிக்கும் பொறுப்பு இரு மாதத்தில் தனியாரிடம் ஒப்படைக்கப்படும். தமிழகத்தில் 103 நகராட்சிகளில் 30 நகராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு அவற்றில் விளக்குகள் பராமரிக்கும் பணி நடைபெறவுள்ளது.

இதில் ராமநாதபுரமும் சேர்க்கப்பட்டு பராமரிப்பு பணி ஒப்படைக்கப்பட உள்ளது. முதற்கட்டமாக கும்பகோணம், சிவகாசி ஆகிய இரு நகரங்கள் பரீட்சார்த்த முறையில் அடுத்த வாரம் முதல் பராமரிப்பு பணி ஒப்படைக்கப்படுகிறது.

அடுத்த நகர்மன்றக் கூட்டத்துக்குள் சாலை, குடிநீர் குழாய் இணைப்புகள், தெருவிளக்குகள் குறித்து புகார் வராமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

நகர்மன்ற உறுப்பினர்கள் இருவர் நீக்கப்பட்டது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் அது குறித்து எதுவும் பேச முடியாது.

சுடுகாட்டில் சடலங்களை எரிப்பது குறித்து ஒரு தொகை நிர்ணயம் செய்யப்பட்டு அத்தொகை வசூலிக்கப்படும். கூடுதல் கட்டணம் வசூலிக்க அனுமதிக்கப்படாது என்றார் தலைவர்.