Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

அனுமதி பெறாத கட்டிடங்களுக்கு "சீல்'

Print PDF

தினமலர்                02.12.2010

அனுமதி பெறாத கட்டிடங்களுக்கு "சீல்'

சேலம்: ""சேலம் மண்டலத்தில் அனுமதியின்றியும், விதிமுறைக்கு புறம்பாகவும் கட்டப்பட்டுள்ள 80 கட்டிட உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது,'' என்று நகர் ஊரமைப்பு துறை இயக்குனர் பங்கஜ்குமார் பன்சால் தெரிவித்தார். சூரமங்கலத்தில் உள்ள மண்டல நகர் ஊரமைப்பு துறை அலுவலகத்தில் நேற்று சேலம் மாநகராட்சி, சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் சிறப்பு கட்டிடம், பல மாடி கட்டிடம், மனைப்பிரிவு, தொழிற்சாலை கட்டிடம் ஆகியவற்றுக்கு அனுமதி பெறுவதில் உள்ள இடர்பாடுகளை களைவதற்கான பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம் நடந்தது. முகாமில், நகர் ஊரமைப்பு துறை இயக்குனர் பங்கஜ் பன்சால் குமார், கட்டிட அனுமதி பெறுவதில் உள்ள இடர்பாடுகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கினார். தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: உள்ளூர் திட்டக்குழுமத்தின் கீழ் அங்கீகரிக்கப்படாத மனைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. 2010ம் ஆண்டு முதல் புதிய சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

அதில், உள்ளூர் திட்ட குழுமத்துக்கு உட்படாத பகுதிகளில் உள்ள அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகளுக்கும் அபராதம் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகளுக்கு குடிநீர் இணைப்பு, சாலை வசதி உள்ளிட்டவை செய்து கொடுக்க முடியாது. நான்காயிரம் சதுர அடிக்குள் கட்டப்படும் வீடுகளுக்கு மாநகராட்சியில் அங்கீகாரம் வழங்கப்படும். அதற்கு மேல் கட்டப்படும் கட்டிடங்களுக்கு மண்டல அலுவலகம் மற்றும் இணை இயக்குனர் அலுவலகம் மூலம் அனுமதி பெறலாம். சேலம் மண்டலத்தில் அனுமதியின்றியும், விதிமுறைக்கு புறம்பாகவும் கட்டப்பட்டுள்ள 80 கட்டிட உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் முக்கிய பகுதியில் உள்ள லே-அவுட் குறித்த விவரங்களுக்கு தனி "வெப் சைட்' துவங்கப்பட்டுள்ளது.

சேலம் மண்டலத்திலும் லே-அவுட் குறித்த விவரங்களை துல்லியமாக தெரிந்து கொள்ள புதிய வெப்சைட் துவங்குவது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. விரைவில் புது வெப்சைட் துவங்கப்படும். வீட்டுமனைக்கான லே-அவுட் வேண்டுமானால் பொதுமக்கள் மண்டல அலுவலகத்தில் 200 ரூபாய் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். மலைப்பகுதியில் 250 சதுர அடிக்குள் கட்டிடம் கட்டுவதற்கு உள்ளாட்சி அமைப்பிடம் அனுமதி பெற வேண்டும். 250 ல் இருந்து 300 சதுர அடிவரை கட்டிடம் கட்டுவதற்கு மாவட்ட கலெக்டரிடமும், 300 சதுர அடிக்கு மேல் கட்டிடம் கட்ட மாநில இயக்குனர் அலுவலகத்திலும் அனுமதி பெற வேண்டும். உள்ளாட்சி அமைப்புக்களில் அனுமதி பெறாத கட்டிடங்களுக்கு சீல் வைக்க முடியும். எனவே, கட்டிட உரிமையாளர்கள் முறையாக அனுமதி பெற வேண்டும். இவ்வாறு கூறினார். நகர் ஊரமைப்பு துறை உதவி இயக்குனர் நாகராஜன், சேலம் உள்ளூர் திட்ட குழும உறுப்பினர் செயலர் வாழவந்தான் உடனிருந்தனர்.