Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நெல்லை மாநகரப் பகுதியில் நோய் தடுப்பு நடவடிக்கை குறித்து கமிஷனர் ஆலோசனை

Print PDF

தினமலர்                   03.12.2010

நெல்லை மாநகரப் பகுதியில் நோய் தடுப்பு நடவடிக்கை குறித்து கமிஷனர் ஆலோசனை

திருநெல்வேலி : நெல்லை மாநகராட்சி பகுதியில் தொடர் மழை பெய்து வருதால் எடுக்கவேண்டிய நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து டாக்டர்கள், சுகாதார அலுவலர்களுடன் கமிஷனர் ஆலோசனை நடத்தினார். நெல்லை மாநகராட்சி பகுதியில் தொடர் பருவமழை பெய்து வருகிறது. மழைக்காலங்களில் பரவும் நோய்களை தடுப்பதற்கு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநகராட்சி பொதுசுகாதாரத்துறை எடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக மாநகராட்சி மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவ அலுவலர்கள், நகர சுகாதார செவிலியர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் கமிஷனர் சுப்பையன் தலைமையில் நடந்தது.

மழைக்காலங்களில் பரவும் தொற்றுநோய் பற்றிய விபரங்களை அதற்கான அறிகுறிகள் தென்பட்டவுடன் களப்பணியாளர்கள் அந்தந்த பகுதி மருத்துவ அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கவேண்டும். ரோடுகளில் தேங்கியுள்ள மழைநீரை உடனடியாக வடியவைக்கவேண்டும். காலிமனைகளில் வெளியேற வழியின்றி தேங்கியிருக்கும் மழைநீரில் கொசுக்கள் பரவாமல் இருக்க எண்ணெய் பந்துகள் போடவேண்டும். டயர், சிரட்டை, காலிடப்பா, பிளாஸ்டிக் டப்பாக்கள் போன்றவற்றால் நீர் தேங்காமல் கவிழ்த்து வைக்கவும் அறிவுறுத்தப்பட்டது. வீடு வீடாக சென்று நீர் சேமிப்பு தொட்டிகளில் டெமிபாஸ் கரைசல் ஊற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவும், கொசுக்களை கட்டுப்படுத்த கொசுப்புகை மருந்து அடிக்கவும், நீர் தேங்கியுள்ள இடங்களில் கொசுப்புழு ஒழிப்பு மருந்து தெளிக்கவும் அதிகாரிகளுக்கு கமிஷனர் அறிவுரை வழங்கினார். கூட்டத்தில் மருத்துவ அலுவலர்கள் டாக்டர் பிர்தௌசி, சாந்தாமணி, தமிழரசி, சுகாதார ஆய்வாளர்கள் சாகுல்ஹமீது, கலியன் ஆண்டி, முருகேசன், அரசகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.